இந்திய தேசியமா? இந்துத்துவ தேசியமா?
இந்தியா விடுதலையின் 70ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இத்தருணத்தில் சுதந்திர குடியரசை தாங்கி பிடிக்கின்ற ஒவ்வொரு தூணும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.தேசம் தனது விடுதலையின் 50ஆவது ஆண்டு விழாவை 1997ஆம் ஆண்டு கொண்டாடிய பொழுது முன்நின்ற சில முக்கிய சாதனைகளில் ஒன்று ஜனநாயக அரசியல் கட்டமைப்பு ஆகும். இதன் வடிவம் நாடாளுமன்ற ஜனநாயகமாக இருந்தது. நாடாளுமன்ற ஜனநாயக கட்டமைப்பு பல குறைபாடுகளை கொண்டிருந்தது. எனினும் அரசியலில் மக்கள் பங்கேற்பதற்கு சில வாய்ப்புகளை உருவாக்கி தந்தது. அரசியலில் மக்களின் பங்கேற்பு என்பது விடுதலை போராட்டத்தின் ஒரு குறிக்கோளாக இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
உள்ளடக்கம் இழந்த ஜனநாயகம்
எனினும் 1997லிருந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுது அந்த நிலை இல்லை என்பது வருத்தத்திற்குரியது. தேர்தல்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் உள்ளன. மக்கள் பங்கேற்பும் குறையவில்லை. எனினும் ஜனநாயகத்தின் வடிவம் அப்படியே இருக்கும் பொழுது அதன் உள்ளடக்கம் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது.நமது குடியரசின் அரசியல் சட்டம் மக்கள் பங்கேற்புடன் கூடிய ஜனநாயகம் செழித்திட வாய்ப்புகளை கொண்டிருந்தது. ஆனால் ஜனநாயக சமூக மாற்றம் இல்லாமல் முதலாளித்துவம் வளர்வதற்கான வர்க்க சூழல் உருவாக்கப்பட்டது. இந்த பின்புலத்தில் குடியரசின் அரசியல் சட்டம் உருவாக்கிய ஜனநாயகத்திற்கான வாய்ப்பு நொறுங்க துவங்கியது. இதன் முக்கியமான வெளிப்பாடுகள் என்ன?
முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொண்டதும் நிலச்சீர்திருத்தம் அமலாக்கப்படாததும் முக்கிய வெளிப்பாடுகள் ஆகும். சமூக நீதியுடன் கூடிய பொருளாதார அமைப்பை உருவாக்கும் வாய்ப்பை இந்த சமரசம் முடக்கியது. விடுதலையின் ஆரம்ப ஆண்டுகள் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் சமூக மற்றும் பொருளாதார அசமத்துவத்தை உருவாக்கியது. விடுதலை போராட்டம் உருவாக்கிய சமூக மற்றும் பொருளாதார (சமத்துவ) இலக்குகளை நமது அரசியல் சட்டம் தன்னுள் உள்வாங்கியிருந்தது. ஆனால் ஏகபோக முதலாளிகளின் வளர்ச்சி இதனை சிதைத்தது.இத்தகைய காரணிகள் ஜனநாயகத்தையும் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் பலவீனப்படுத்தின.
ஆனால் நவீன தாராளமய முதலாளித்துவம் அமலாக்கப்பட்ட கடந்த இருபது ஆண்டுகளில் ஜன்நாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் பன்மடங்கு அதிகரித்தது. ஜனநாயகம் மிக ஆழமாக சிதைக்கப்பட்டது மட்டுமல்ல; ஜனநாயகம் உள்ளடக்கமே இல்லாமல் வெறும் எலும்புக்கூடு போல ஆக்கப்பட்டுவிட்டது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் நவீன தாராளமயக் கட்டம் செல்வம் ஒரு சிலரிடம் குவிவதை அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் அதிகரித்துள்ளது. கிரடிட் சுசி எனப்படும் நிறுவனத்தின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுவது என்ன? இந்தியாவில் முதல் 1ரூ வசதி படைத்தவர்களிடம் தேசத்தின் செல்வத்தில் 58.4ரூ குவிந்துள்ளது. இதனை முதல் 10ரூ வசதி படைத்தவர்களிடம் உள்ள செல்வம் என கணக்கிட்டால் இது 80.7ரூ ஆக உள்ளது.
முதலாளிகளின் இரும்புப் பிடியில் தேர்தல் அரசியல்
நவீன தாராளமய முதலாளித்துவம் அரசியலில் நுழைந்து அதனை ஆக்கிரமித்து கொண்டுள்ளது. அரசியலுக்கும் பெரு முதலாளித்துவத்திற்கும் உள்ள பிரிக்க முடியாத உறவு இன்றைய தேர்தல் அரசியலின் பின்புலமாக உள்ளது. பெரும் வசதி படைத்தவர்களின் பணம் தேர்தல் அரசியலில் நீக்கமற நிறைந்துள்ளது மட்டுமல்ல; அதனை ஆட்டிப்படைக்கிறது.
மேலும் மேலும் அதிகமான பணக்காரர்களும் முதலாளிகளும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; அமைச்சர்களாகவும் அமர்கின்றனர். அரசியலுக்கும் முதலாளிகளுக்கும் பின்னிப்பிணைந்துள்ள இந்த உறவு ஜனநாயக அமைப்புகளை அரித்துள்ளன. பெரு முதலாளிகளின் இந்த நிதியின் கள்ள மகுடிக்கு அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் அடிமையாகி விட்டன. அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் நவீன தாராளமய கொள்கைகளை ஆலிங்கனம் செய்துள்ளன. எந்த அரசியல் கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும் அடிப்படை பொருளாதார கொள்கைகளில் மாற்றம் இருக்காது.இத்தகைய நிலைமைகள் நாடாளுமன்ற அமைப்புகள் பலவீனமடைவதற்கு இட்டுச்சென்றுள்ளன.
தேர்தல் அமைப்பின் மீது பெரு முதலாளிகளுக்கு உள்ள இரும்பு பிடியின் காரணமாக மாற்று திட்டங்கள் அல்லது கொள்கைகளை உடைய அரசியல் கட்சி விளிம்பு நிலைக்கு தள்ளப்படுகிறது.தேர்தல் அரசியல் அமைப்பின் இத்தகைய நெறிபிறழ்ந்த தன்மைதான் மத்தியில் ஆளுகின்ற பாஜகவால் தனது அரசியல் வேட்கைக்காக விபரீதமாக பயன்படுத்தப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் வெட்கங்கெட்ட செயல்கள் நடக்கின்றன. அவர்கள் கட்சி தாவிட தூண்டப்படுகின்றனர்; அரசியல் எதிரிகளை அடக்கி ஒடுக்க மத்திய புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
அம்பேத்கரின் எச்சரிக்கை!
அரசியல் அமைப்பு முறையின் மீது கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் தனது இரும்புபிடியை மேலும் வலுவாக்கிட ஏதுவாக மோடி அரசாங்கம் ‘தேர்தல் நிதி பத்திரங்கள்’ (electoral bonds) எனும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடைமுறை மூலம் கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தரலாம். எவர் கொடுத்தார்கள் என்பது வெளியில் தெரியாது. எந்த கேள்வியும் கேட்கப்படாது.தேர்தலில் பணத்தின் ஆதிக்கத்தை தடுத்திட வழிவகுக்கும் தேர்தல் சீர்திருத்தங்களுக்காக போராட வேண்டிய தேவை தவிர்க்க இயலாத ஒன்றாக முன்வந்துள்ளது. அடிப்படையான தேர்தல் சீர்திருத்தங்களில் ஒன்று விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை அறிமுகப்படுத்துவது ஆகும்.அரசின் ஜனநாயக அமைப்புகளை சீரழிக்கின்ற பணி மிகவும் திட்டமிட்டு நுணுக்கமாக செய்யப்படுகிறது. இத்தகைய சீரழிப்பு பணிகள் அரசியல் அமைப்பு சட்டத்தின் பெயராலேயே செய்யப்படுவதுதான் கொடுமை! டாக்டர் அம்பேத்கர் அவர்களின் எச்சரிக்கைதான் நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னார்:‘அரசியல் அமைப்பு சட்டம் எவ்வளவு நல்லதாகவும் இருக்கலாம்! ஆனால் அதனை அமல்படுத்துபவர்கள் தீயவர்களாக இருந்தால் அந்த அரசியல் அமைப்பு சட்டமே தவறான ஒன்றாக நிரூபிக்கப்படும்’
இந்திய தேசியமா? இந்துத்துவ தேசியமா?
தேசத்தின் சுயேச்சை தன்மையும் இறையாண்மையும் சீரழிக்கப்படுகிறது. முரண்பாடான தன்மை என்னவெனில் ஒரு விதமான ‘தீவிர தேசியம்’ எனும் பெயரால் இந்த சீரழிக்கும் பணி நடக்கிறது. இந்த தேசியம் என்பது இந்தியாவில் பிறந்து வாழ்ந்து வரும் அனைவரையும் இந்தியாவின் குடி மக்கள் என கருத வேண்டும் எனும் அணுகுமுறை கொண்டது அல்ல. இந்த தேசியம் அனைவரையும் உள்ளடக்கியது அல்ல. இது ‘இந்துத்துவா தேசியம்’. இத்தகைய தேசியம் பெரும்பான்மை மதவெறி அல்லாமல் வேறு அல்ல!பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் தேசியம் எனும் கோட்பாடு முஸ்லிம்களை கிறித்துவர்களை மற்றும் இந்துத்துவா எனும் கோட்பாடை ஏற்க மறுப்பவர்களை ஒதுக்கி வைக்கிறது. இது தேசிய ஒற்றுமையை பலவீனப்படுத்துகிறது.
நவீன மதச்சார்பின்மை தேசத்தின் மீது பிற்போக்கு தனமான தாக்குதல்களுக்கு வழியை திறந்துவிடுகிறது.இந்துத்துவ தேசியம் என்பது எவ்விதத்திலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தன்மை கொண்டது அல்ல! இதனால்தான் விடுதலை போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பங்கேற்கவில்லை. இந்துத்துவ சக்திகள் ஆட்சியில் இருக்கும் இந்த தருணத்தில் மோடி அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டணி உருவாக்க மேலும் மேலும் முனைப்புடன் செயல்படுகிறது. ஏகாதிபத்தியம் தன் ‘இயற்கையான நேச அணி’ என்பது மோடி அரசாங்கத்தின் கருத்து. அமெரிக்காவுடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் உருவாக்கிய ‘நீண்டகால அதிமுக்கியத்துவம் வாய்ந்த கூட்டணி’யை ஒரு குறுகிய காலத்தில் மோடி அரசாங்கம் மிக ஆழப்படுத்தியுள்ளது.
இன்று அமெரிக்கா இந்தியாவை ‘முக்கிய பாதுகாப்பு கூட்டாளி’ என வகைப்படுத்துகிறது. இதன் உண்மையான பொருள் என்னவெனில் இந்தியா அமெரிக்காவின் இராணுவ இளைய பங்காளி என்பதாகும். ‘தேசிய’ பா.ஜ.க. அரசாங்கத்திற்கு அமெரிக்க இராணுவ கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் எரிபொருள் நிரப்பிக்கொள்ளவும் பராமரிப்பு பணிகளுக்காகவும் இந்திய துறைமுகங்கள் அல்லது விமான நிலையங்களை பயன்படுத்திட ஒப்பந்தம் செய்து கொள்ள எவ்வித கூச்சமும் இல்லை. ‘பாரத மாதாவின்’ இறையாண்மை இதனால் பாதிக்கப்படுவது பற்றியும் பாஜகவுக்கு கவலை இல்லை.
இராணுவ உற்பத்தியில் கார்ப்பரேட் நிறுவனங்கள்
வங்கிகள், இரயில்வே மற்றும் முக்கியமான பொதுத்துறைகளை தனியார்மயப்படுத்த எடுக்கும் தொடர் நடவடிக்கைகள் தேசத்தின் பொருளாதார இறையாண்மையை பாழ்படுத்தும். இராணுவ பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயல்களில் இறையாண்மையை பாழ்படுத்தும் இச்செயல் பகிரங்கமாக அம்பலமாகிறது. இராணுவ பாதுகாப்பு உற்பத்தியில் 100ரூ நேரடி அந்நிய மூலதனத்தையும் 100ரூ தனியார் உற்பத்திக்கும் மோடி அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ உற்பத்தி நிறுவனமான ‘லாக் ஹீட் மார்டின்’ நிறுவனமும் டாட்டா குழுமமும் போர் விமானங்களை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளன.
கல்யாணி குழுமம் இஸ்ரேலின் ‘ரஃபேல்’ நிறுவனத்துடன் இணைந்து குறுகிய தூரம் செல்லும் ஏவுகணைகளை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த பட்டியல் நீள்கிறது.இராணுவ உற்பத்தியில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களையும் அரசு துறையில் உள்ள தளவாட உற்பத்தி ஆலைகளையும் சீரழிப்பதும் அவற்றை அந்நிய மற்றும் இந்திய கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் விழுங்கிட அனுமதிப்பதும் இறையாண்மையின் முக்கிய பகுதியை பறிப்பது ஆகும்.
இந்துத்துவா கோட்பாடுகள் அதிகாரப்பூர்வ சித்தாந்தமா?
அறிவியல் சிந்தனை அடிப்படையில் ஒரு நவீன மதச்சார்பின்மை சமூகத்தை முன்னெடுத்து செல்லும் என மிகுந்த எதிர்பார்ப்பை நமது தேசத்தின் விடுதலை உருவாக்கியது. ஆனால் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள் இந்த எதிர்பார்ப்பை முன்னெடுத்துச் செல்வதில் (தமது வர்க்கங்களின் சுய நலனுக்காக) தவறின. இப்பொழுது 70 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து முனைகளிலும் பின்னோக்கி செல்லும் அவலமான சூழலை நாம் சந்தித்து கொண்டுள்ளோம். பிற்போக்குத் தனமான பகுத்தறிவுக்கு ஒவ்வாத அறிவியலுக்கு எதிரான மதத்தின் மேலாதிக்கத்தை திணிக்கும் ஒரு சமூகம் உருவாக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கல்வி நிலையங்களும் கலாச்சார அமைப்புகளும் (பிற்போக்கு சக்திகளால்) முற்றுகையில் சிக்கியுள்ளன. இந்துத்துவா கோட்பாடுகளை அதிகாரப்பூர்வ சித்தாந்தமாக மாற்றுவதற்கு மோடி அரசாங்கம் முனைப்புடன் செயல்படுகிறது.நவீன தாராளமய முதலாளித்துவத்திற்கும் இந்துத்துவ மத அடிப்படைவாதத்திற்கும் ஒரு அச்சாணி உறவு உருவாகியுள்ளது. இந்த உறவு ஜனநாயகத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் தேசத்தின் இறையாண்மைக்கும் மிகவும் ஆபத்தான ஒன்று! நவீன தாராளமயம் மற்றும் இந்துத்துவ மதஅடிப்படைவாதம் எனும் இரட்டை அழிவு சக்திகள் உருவாக்கும் எதேச்சதிகாரத்தை எதிர்த்து வலுவாக போராட வேண்டும். அப்பொழுதுதான் சுதந்திர இந்தியாவின் அடித்தளத்தைக் காக்க முடியும்.
இரட்டை அழிவு சக்திகளுக்கு சவாலாக இடது ஜனநாயக மாற்று!
பெரும் மூலதனத்தால் நாடாளுமன்ற ஜனநாயகம் தனது உயிரோட்டத்தை இழந்து எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. மேலும் இதே பெரும் மூலதனத்தால் தேர்தல் முறையும் பாழ்பட்டு கிடக்கிறது. இந்த பின்னணியில் ஜனநாயகத்திற்கான போராட்டத்தை நாடாளுமன்றத்தின் அரங்கங்களுக்குள் மட்டுமே நடத்தி வெல்ல இயலாது. நாடாளுமன்றத்திற்கு வெளியே பன்முக போராட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். உழைக்கும் மக்களுக்கு எதிராக தாக்குதல் தொடுக்கும் நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிராக இயக்கங்கள் உருவாக்குவது;
பாசிச மத அடிப்படைவாத தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றுபட்ட எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்குவது; எதேச்சதிகாரத்திற்கு எதிராகவும் தேசத்தின் இறையாண்மையை பாதுகாக்கவும் மிகவும் பரந்துபட்ட அணிதிரட்டலை உருவாக்குவது ஆகிய பன்முக போராட்டங்கள் முக்கியத்துவம் பெறவேண்டும்.இப்போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் அனைத்துக்கும் கலங்கரை விளக்கமாகவும் வழிகாட்டும் கொள்கைகளாகவும் அமைய வேண்டியது மாற்று திட்டம் அதாவது இடது ஜனநாயக திட்டம் ஆகும்.
சுதந்திர இந்தியாவை தனது கொள்ளை வெறிக்காக வேட்டையாடியது மட்டுமல்ல; நவீன தாராளமயத்திற்கும் இந்துத்துவாவிற்கும் பின்னிப்பிணைந்த உறவை உருவாக்கிய சக்திகள் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள் ஆகும். இந்த நஞ்சு கலந்த கொடிய உறவை அமலாக்கி முன்னிலைப்படுத்துவது பாஜக- ஆர்எஸ்எஸ் கூட்டு ஆகும். இடது ஜனநாயக மாற்று இயக்கத்தை வார்த்தெடுப்பதன் மூலம் மட்டுமே இந்த நாசகர சக்திகளுக்கு எதிராக நாம் சவாலை உருவாக்க முடியும்.
தமிழில்: அ.அன்வர் உசேன்