தனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வருவதாக ‘கக்கூஸ்’ ஆவணப் பட இயக்குநர் திவ்யா பாரதி தெரிவித்துள்ளார்.
மதுரை:ஆவணப் பட இயக்குநர் திவ்யா பாரதி, கடந்த வருடம் ‘கக்கூஸ்’ என்ற ஆவணப் படம் எடுத்திருந்தார். அந்தப் படம், மலம் அள்ளும் தொழிலாளர்களின் வேதனைகளையும் கஷ்டங்களையும் வெளிப்படுத்தும் விதமாக இருந்தது. அந்தப் படத்திற்கான ட்ரைலர் இணையத்தில் வெளியானவுடனேயே அந்த ஆவணப் படத்தை வெளியிடக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், இந்த வருடத்தில் தொடக்கத்தில் ‘கக்கூஸ்’ படம் வெளியானது.
இந்த நிலையில், 2009-ம் ஆண்டில் திவ்யா பாரதி மாணவியாக இருக்கும்போது போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கிற்காக, அவரை கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த நிலையில், தனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வருவதாக அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில்,
‘என் இரண்டு நம்பர்களையும் Whats app குழுக்களில் பரவவிட்டிருக்கிறார்கள். நேற்று இரவிலிருந்து 10 நிமிடத்திற்கு ஒரு முறையென அழைப்புகள் வருகின்றன. எடுத்து பேசத் தொடங்கியவுடன் பாலியல் ரீதியாக கடுமையாக பேசினர். நிர்வாணமாய் நிறுத்தி வெட்டி கொலை செய்வோம் என்று மிரட்டினர். இது குறித்து மேற்கொண்டு முகநூலில் பதிவிட வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனால் தொலைபேசி அழைப்புகளின் வன்முறை கூடிக் கொண்டே இருப்பதால், என் உயிருக்கோ, உடைமைக்கோ எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கு அந்த அமைப்புகளே காரணம் என்பதை பொது வெளியில் பதிவு செய்ய விரும்புகிறேன். கக்கூஸ் படம் வெளிவந்து 6 மாதம் கடந்த பிறகு, வக்கிர அரசியல் திட்டத்தோடு இன்று இந்த தாக்குதல் தொடங்கியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.