உதவிக் கேட்ட சிறுமியை இரக்கமின்றி பாலியல் பலாத்காரம் செய்த கார் ஓட்டுநர்!
இங்கிலாந்தின் பெர்மிங்ஹாம் நகரில்தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இளம்பெண்ணை இரக்கமற்ற முறையில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கிய நபர் மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய இருவருக்கும் இங்கிலாந்து போலீசார் வலைவீசியுள்ளனர்.
இரவு 7 மணியளவில் வில்லா பூங்கா அருகேயுள்ள விட்டான் ரயில் நிலையம் சென்ற 15 வயது இளம்பெண்ணை அங்கிருந்து ஒதுக்குப்புறத்திற்கு இழுத்துச் சென்ற இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ரயில்நிலையத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த நபர் ஆசியாவை சேர்ந்தவர் என அந்த சிறுமி போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
ரயில் நிலையத்தில் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு மர்மநபர் தப்பியோடிய நிலையில், அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாத சிறுமி, சிறிதுநேரம் கழித்து குழப்பமான மனநிலையில் அருகேயிருந்த சாலைக்கு தப்பிவந்து அங்கே சென்ற காரை நிறுத்தி உதவிக் கோரியுள்ளார்.
ஆபத்தில் இருந்து தப்பிவந்த சிறுமியை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறிய கார் ஓட்டுநர் அவரை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இரவு 7 மணியளவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி, அதே இரவு 2 மணியளவில் மீண்டுமொரு முறை மற்றொரு நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் அதிர்ச்சியடைந்த நிலையில் தற்போது சிகிச்சையும், உளவியல் ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது.
தன்னை ரயில் நிலையத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய நபரும், காரில் அழைத்துச் சென்ற நபரும் ஆசிய நாட்டவர் என இளம்பெண் விசாரணையில் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விட்டான் ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வரும் போலீசார், ரயில் நிலையத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கியவர் 20 வயது மதிக்கத்தக்கவர் என்றும், வெளிறிய நிறத்தையும், காவி நிற கண்களையும், கட்டுடலையும் கொண்ட 6 அடி உயரமானவர் என்றும் சாம்பல் நிற டிரக் ஷூட் போட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரம் செய்த கார் ஓட்டுநரும் 20 வயது மதிக்கத்தக்கவர் என்றும், 5 அடி 6 அல்லது 7 அங்குலம் உயரம் உள்ளவர் என்றும், நீல நிற ஜம்பர் மேலாடையும், கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட் போட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.