ஷங்கரின் அதிரடி அறிவிப்பு
ரஜினி நடித்திருக்கும் ‘2.0’ படத்தின் இசை, டீஸர், ட்ரெய்லர் ஆகியவை எப்போது வெளியாகும் என்பதை லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது
‘2.0’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 2018-ல் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் இசை, டீஸர், ட்ரெய்லர் உள்ளிட்டவை எப்போது வெளியாகும் என்று தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜூ மகாலிங்கம், “கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது. அக்டோபரில் துபாயில் இசை வெளியீடு, நவம்பரில் ஹைதராபாத்தில் டீஸர் வெளியீடு, டிசம்பரில் நம்ம சிங்கார சென்னையில் ட்ரெய்லர் வெளியீடு” என்று தெரிவித்திருக்கிறார்.
இத்தகவலால் ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். தற்போது பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளை இறுதி செய்யும் பணிகள் உள்ளிட்டவை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஏமி ஜாக்சன், அக்ஷய்குமார், சுதன்ஷு பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘2.0’ படத்தை பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பாக பாடல் காட்சி ஒன்றை பிரம்மாண்டமான அரங்கம் ஒன்றில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.