கிரிக்கெட்டில் சாதித்துக் காட்டிய வீர தமிழச்சி…………..
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தமிழர் என்பதே பலருக்கும் தெரியாது.
காரணம், அவருடைய குடும்பம் தமிழ்நாட்டில் வசிக்கவில்லை. தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த துரைராஜ் – லீலாராஜ் ஆகியோருக்குப் பிறந்த மிதாலி ஆரம்ப காலங்களில் ஜோத்பூரில் வசித்தார். பிறகு மிதாலியின் குடும்பம் பிறகு ஆந்திராவுக்கு இடம்மாறியது. முதலில் பரதநாட்டியம் கற்றுவந்த மிதாலி பிறகு தந்தையின் உந்துதலால் கிரிக்கெட்டிலும் ஆர்வம் செலுத்தினார்.
அண்ணன் விளையாடுவதை வேடிக்கைப் பார்க்க கிரிக்கெட் மைதானத்துக்குச் சென்றுகொண்டிருந்தார். காலையில் மிகவும் தாமதமாக எழுகிறார் என்பதால் மிதாலியை கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்பினார் துரை ராஜ். 9 வயது முதல் கிரிக்கெட் அவர் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகித்தது.
இளம் வயதில் 8 வருடங்கள் பரதநாட்டியம் கற்றுக்கொண்டிருக்கிறார். ஒருகட்டத்தில் பரதநாட்டியமா கிரிக்கெட்டா என்று முடிவெடுக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் பயிற்சிகளால் பரதநாட்டிய வகுப்புகளில் கவனம் செலுத்தமுடியாமல் போனது. இந்திய அணிக்குத் தேர்வாகிற சமயத்தில் இந்தக் குழப்பம் உண்டானதால் கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்து பரதநாட்டியத்திலிருந்து விலகினார். 17 வயதில் இந்திய அணிக்குத் தேர்வானார்.
இந்தியாவுக்காக விளையாடவேண்டும் என்கிற தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவே கிரிக்கெட்டில் கூடுதல் கவனம் செலுத்தினார் மிதாலி. தமிழ்க்குடும்பத்திலிருந்து வந்ததால் ஆரம்பத்தில் எதிர்ப்புகள் வந்தன. பெண்ணையா கிரிக்கெட் விளையாட அனுப்புகிறார் என்று தந்தையிடம் கேள்விகள் எழுப்பினார்கள். பயிற்சிக்குச் செல்வதால் நிறைய குடும்ப விழாக்களைத் தவறவிட நேர்ந்தது எனவே என் குடும்பத்தில் பலருக்கும் இதில் விருப்பம் இல்லை என்கிறார் மிதாலி.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 6,000 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடி வரும் மிதாலி ராஜ், புதன்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 41 ரன்கள் எடுத்தபோது மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6,000 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற சாதனை அவர் வசமானது. முன்னதாக அவர் 34 ரன்கள் எடுத்திருந்தபோது மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவரான இங்கிலாந்தின் எட்வர்ட் சார்லோட்டே (5,992) சாதனையை முறியடித்தார். ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை எட்டிய மிதாலி ராஜ், கிர்ஸ்டன் பீம்ஸ் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி 6,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதுவரை 183 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள 35 வயதான மிதாலி ராஜ் 6,028 ரன்கள் குவித்துள்ளார். மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய சாதனையும் இந்தியா வசமேயுள்ளது. இந்திய வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி 160 போட்டிகளில் விளையாடி 189 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளிடம் தமிழில் பேசுவார் மிதாலி. அதேபோல சென்னைக்கு வருகிறபோதும் இங்குள்ள அனைவரிடமும் மறக்காமல் தமிழிலேயே பேசுவார். இதுபற்றி இந்திய வீராங்கனை நிரஞ்சனா கூறியதாவது: மிதாலி மிகவும் எளிமையாக நடந்துகொள்வார். உள்ளூர் கிரிக்கெட் விளையாட சென்னை வந்தபோது பெரிய விடுதிகளில் தங்காமல் நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் மற்ற வீராங்கனைகளுடன் தங்கினார். இளம் வீராங்கனைகளுடன் சரிசமமாகப் பழகுவார் என்கிறார்.
கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்திருக்கும் இந்தத் தமிழ்ப் பெண்ணுக்குத் தமிழக அரசு பரிசுத்தொகை வழங்கி மேலும் ஊக்குவிக்கவேண்டும். இதனால் தமிழ்நாட்டில் அவரைப் பார்த்து இன்னும் பல வீராங்கனைகள் உருவாக வாய்ப்புண்டு.