பிசிசிஐயால் அவமனபடுத்தபட்ட திராவிட்,கும்ப்ளே மற்றும் ஜாகீர்கான்….!
டெல்லி : இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ராகுல் திராவிடும், பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகீர்கானும் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பதன் மூலம் அவர்கள் இருவரும் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என பிசிசிஐ நிர்வாகக் குழுவின் முன்னாள் உறுப்பினரான ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் கூறியிருப்பதாவது: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான அனில் கும்ப்ளே அவமானப்படுத்தப்பட்டதைப் போன்று இப்போது ராகுல் திராவிடும், ஜாகீர்கானும் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
கும்ப்ளே, திராவிட், ஜாகீர்கான் ஆகிய மூவரும் தலைசிறந்த கிரிக்கெட் ஜாம்பவான்கள். கிரிக்கெட்டுக்காக அவர்கள் நிறைய பங்களிப்பு செய்திருக்கிறார்கள். அவர்களை அவமானப்படுத்தியிருப்பது நியாயமல்ல என கூறியுள்ளார்.
கடந்த 11-ஆம் தேதி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். அப்போது இந்திய அணி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறபோது பேட்டிங் பயிற்சியாளராக ராகுல் திராவிடும், பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகீர்கானும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிசிசிஐ நிர்வாகக் குழுவினர், பிசிசிஐயின் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டம் கடந்த சனிக்கிழமை தில்லியில் நடைபெற்றது. அப்போது ரவி சாஸ்திரியின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கிய நிர்வாகக் குழு, ராகுல் திராவிட், ஜாகீர்கான் ஆகியோரின் நியமனம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை.
தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்த்ரியிடம் ஆலோசித்த பிறகே பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என பிசிசிஐ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.