நரேந்திர மோடி ஒரு ‘தீவிரவாதி’: பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிப் பாய்ச்சல்!
இஸ்லாமாபாத்: இந்தியாவின் பிரதமராக தீவிரவாதி நரேந்திர மோடி ஆட்சி செய்கிறார் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அத்துமீறி கருத்து வெளியிட்டுள்ளார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் இந்திய தூதர் ஈனாம் காம்பிர் செப்டம்பர் 24-ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 72 வது கூட்டத்தில் பேசியபோது பாகிஸ்தானை கடுமையாக சாடினார். அந்த நாடு, பயங்கரவாதத்தை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கருத்து வெளியிட்டுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை ஜியோ டி.வி.யில் ‘டாக் ஷோ’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அளித்த பேட்டியில், “இந்த நேரத்தில் அங்கு (இந்தியா) நரேந்திர மோடி என்ற ஒரு பயங்கரவாதி பிரதமராக உள்ளபோது, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதாக சுஷ்மா ஸ்வராஜ் குற்றம் சாட்டக்கூடாது என்றும் குஜராத்தில் அவரது கைகளில் முஸ்லிம்களின் ரத்தக்கறை படிந்தது. அவர்களை (இந்தியர்களை) ஒரு பயங்கரவாத கட்சி ஆள்கிறது. பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.தான் அங்கு ஆட்சி நடத்துகிறது. பாஜக அதன் துணை அமைப்பு போன்றது” என்று வரம்பு மீறி விமர்சனம் செய்தார்.
மேலும்,தீவிரவாதியை பிரமராக தேர்ந்தெடுத்த ஒரு நாட்டை பற்றி நாம் என்ற கூற முடியும் என்றவர் முஸ்லீம்களும், தலித்துகளும் இந்தியாவில் “பசு பாதுகாப்பு” என்ற பெயரில் கொல்லப்படுவதாக குற்றம்சாட்டினார்.
அந்த நிகழ்ச்சியை நடத்திய ஹமித் மிர், “நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட தீவிரவாதி ” என கூறினார்.