சிறு வணிகர்களுக்கும் ஜிஎஸ்டி!! அதிகாரிகளுக்கு மோடி உத்தரவு
”சிறு வர்த்தர்களுக்கு ஏற்ற ஜிஎஸ்டி பதிவு முறையை கொண்டு வர வேண்டும்” என்று அதிகாரிகளை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
நேரடி மற்றும் மறைமுக வரி அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். இதன் பின்னர் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் பிரதமர் மோடி பேசியதாக வெளியிட்ட விபரம்.
”புதிய மறைமுக வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி.யின் பயன்களை ஆண்டுக்கு ரூ. 20 லட்சத்திற்கும் குறைவான வர்த்தகம் மேற்கொள்ளும் சிறு வணிகர்களும் பயனடையும் வகையில் பதிவு முறையை வடிவமைக்க வேண்டும். அவர்களுக்கு இது சட்டப்பூர்வ அவசியமில்லை என்றாலும் கூட இதை அதிகாரிகள் செய்ய வேண்டும்.
ஜிஎஸ்டி மூலம் சிறு வணிகர்களுக்கு பெரிய அளவில் வர்த்தகம் மேற்கொள்ள அதிக வாய்ப்பு ஏற்படும் என்பதால் அவர்களையும் இந்த புதிய வரிவிதிப்பு முறையில் இணைய ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.
”விரைந்து வரி செலுத்தவும், வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டறியும் வகையில் வரித் துறை அதிகாரிகள் தற்போது தீவிர பணியாற்றி வருகின்றனர். மேலும், தனி நபர் வருவாய் குறித்த விபரங்களை வெளியிடாதவர்களை தகவல் பகுப்பாய்வு கருவிகள் மூலம் கண்டறிய வேண்டும்” என மோடி தெரிவித்தார்.
”அதிகாரிகள் தங்களது பணி முறையை மேம்படுத்துவதோடு, அவசர உணர்வோடு பணியாற்ற வேண்டும். 75ம் ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் 2022ம் ஆண்டில் வரி நிர்வாகத்தை மேம்படுத்த இலக்கு நிர்ணயம் செய்ய வேண்டும். வரி நிர்வாகத்தில் மனித செயல்பாட்டை குறைக்க வேண்டும். இ.வரி மதிப்பீடு முறை மற்றும் தொழில்நுட்ப முறைகளை ஊக்கப்படுத்த வேண்டும்” என்றார் மோடி.