மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா?: நியூஸிலாந்துடன் இன்று மோதல்
இங்கிலாந்து மற்றும் வேல்சில் பெண்களுக்கான 11வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் ‘டாப்-4’ இடங்கள் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில், இங்கிலாந்து (10), ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா (10), தென் ஆப்ரிக்கா (9) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. புள்ளிப்பட்டியலில் 4, 5 வது இடத்தில் உள்ள இந்தியா (8), நியூசிலாந்து (7) அணிகள் இன்று கடைசி ஆட்டத்தில் மோதுகின்றன. இதில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளன. மந்தனா மந்தம்: இந்திய அணிக்கு துவக்கம் சரியாக இல்லை.
முதல் இரு போட்டிக்கு பின், அடுத்த நான்கு ஆட்டங்களிலும் மந்தனா ( 90, 106, 2, 8, 4, 3 ரன்) ஒற்றை இலக்கில் திரும்பினார். மற்றொரு வீராங்கனை பூணம் ராத் (1 சதம்), கேப்டன் மிதாலி ராஜ் (3 அரைசதம்) பரவாயில்லை என்றாலும், அதிகமான பந்துகளை வீணடிக்கின்றனர். டெஸ்ட் போட்டியை போல, மந்தமான ஆட்டத்தை தருவதால் எதிரணிக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்க முடியாமல் போகிறது. கடைசி நேரத்தில் ஹர்மன்பிரீத் கவுர், வேதா, தீப்தி சர்மா சற்று உதவினால் நல்லது.
அணியின் பீல்டிங்கும் மோசமாக உள்ளது. பவுலிங் சுமார்: பவுலிங்கில் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் கோஸ்வாமி, 6 போட்டிகளில் 4 விக்கெட் தான் வீழ்த்தியுள்ளார். ஏக்தா பிஷ்ட் (9), பூணம் யாதவ் (7) நம்பிக்கை தருகின்றனர். ஷிகா பாண்டே (5), ஹர்மன்பிரீத் கவுர் (5) இன்று நம்பிக்கையுடன் செயல்பட்டால், அரையிறுதிக்கு செல்லலாம்.
பேட்ஸ் பலம்: நியூசிலாந்து (133/3) அணியை பொறுத்தவரையில் பயிற்சி போட்டியில் இந்திய அணியை (130/10) சாய்த்த உற்சாகத்தில் உள்ளது. கேப்டன் சுஜி பேட்ஸ் (241 ரன்) அணியின் பேட்டிங்கிற்கு வலு சேர்க்கிறார். சாட்டர்ஒயிட் (172), பிரைஸ்ட் (120), டிவைன் (119) என, பலரும் அணிக்கு கைகொடுக்கின்றனர். பவுலிங்கில் இதுவரை 10 விக்கெட் வீழ்த்திய அமெலியா கெர், காஸ்பெரக் (7), ஹடில்ஸ்டன் (6) நம்பிக்கை தருகின்றனர்.
மழை வருமா இன்று போட்டி நடக்கும் டெர்பியில், காலையில் மழைவர 64 சதவீதம் வாய்ப்புள்ளது. இதனால் போட்டி துவங்க தாமதம் ஏற்படலாம். மதியம், மாலை நேரத்தில் வானம் தௌிவாக இருக்கும். * ஒருவேளை மழையால் போட்டி ரத்தானால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைக்கும்.
அப்போது இந்திய அணி 9 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு செல்லும். நியூசிலாந்து (8) வௌியேற நேரிடும். மைதான ராசி இன்று போட்டி நடக்கும் டெர்பி மைதானத்தில், இம்முறை பங்கேற்ற 3 போட்டிகளிலும்(எதிர்-இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை)இந்திய அணி வென்றது. இந்த அதிர்ஷ்டம் கைகொடுக்கும் பட்சத்தில் நியூசிலாந்தையும் வெல்லலாம்