பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் கால விடுப்பை சாத்தியமாக்கியுள்ள கேரள ஊடக நிறுவனம்
இதற்குமுன் மும்பையைச் சேர்ந்த ` கல்ச்சர் மிஷின்` என்ற நிறுவனம் தங்களது பெண் ஊழியர்கள் மாதவிடாய் காலத்தின் முதன் நாளன்று விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது.
அதனை தொடர்ந்து தற்போது `மாத்ருபூமி` தொலைக்காட்சி ஊடக நிறுவனம் தங்களின் பெண் ஊழியர்கள் மாதவிடாய் காலங்களில், எந்த நாளில் வேண்டுமென்றாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாத்ருபூமியின் கூட்டு நிர்வாக இயக்குநர் ஷ்ரேயன்ஸ் குமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், பெண் ஊழியர்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு நல்லதொரு பணிச்சூழலை உருவாக்கி தர வேண்டியது அவசியம் என்கிறார்.
மாத்ருபூமியில் சுமார் 70 பெண் ஊழியர்கள் பணிபுரிகின்றனர் என்று கூறும் அவர், இது ஒரு கூடுதல் விடுமுறை என்றும் மாதவிடாய் காலத்தில் தாங்கள் விரும்பும் நேரத்தில் பெண் ஊழியர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கிறார்.
மேலும் இந்த அறிவிப்பு குறித்து ஆண் ஊழியர்கள் நேர்மறையாக எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
“அறிவிப்பைக் கேட்டதும் கண்ணீர்“
“மாத்ருபூமியின் தொலைக்காட்சி நிறுவன ஊழியர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது மேலும் இது வெற்றிகரமாக இருக்கும் பட்சத்தில் மாத்ருபூமி வானொலி மற்றும் செய்தித்தாள் பிரிவிற்கும் இது நடைமுறைப்படுத்தப்படும்” என்றும் தெரிவித்தார் ஷ்ரேயம்ஸ் குமார்.
மேலும் பெண்கள் முன்னேற்றம் என்பது அவர்களுக்கு பச்சாதாபம் காட்டுவது என்பது இல்லை அவர்களுக்கென்று தனித்துவமாக ஏற்படும் வலிகளை புரிந்துகொள்வதுதான் என்கிறார் அவர்.
இது குறித்து மாத்ரூபூமி செய்தி பிரிவு, செய்தி ஆசிரியர் ஆரத்தியிடம் கேட்டப்போது, இது ஒரு சிறப்பான அறிவிப்பு என்றும் இதைக் கேட்டதும் தங்கள் கண்களில் கண்ணீர் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“இந்த மகிழ்ச்சி விடுமுறை கிடைக்கிறது என்றில்லாமல் நீங்கள் புரிந்து கொள்ளப்படுகீறீர்கள் என்ற உணர்வால் வரும் மகிழ்ச்சி” என்கிறார் ஆரத்தி.
மேலும் இந்த அறிவிப்பு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் பெண்கள் வெளிவந்து தாங்கள் மாதவிடாய் நாளில் இருப்பது குறித்து வெளிப்படையாக பேசுவார்கள் என்றும் தெரிவிக்கிறார் ஆரத்தி.
இந்த விடுமுறை அறிவிப்பை மேற்கொண்ட அடுத்த நாளே சக பெண் ஊழியர் ஒருவர் தான் மாதவிடாய் காலத்தில் இருப்பதாகவும், தான் விடுப்பில் செல்வதாகவும் வெளிப்படையாக அறிவித்தார் என்று தெரிவிக்கும் ஆரத்தி காலங்காலமாய் பெண்கள் மாதவிடாய் குறித்து பேசக் கூடாது என்ற ஒரு எண்ணத்தை இது தவிடுபொடியாக்குவதாய் தெரிவிக்கிறார்.
‘கல்ச்சர் மிஷின்’ என்ற நிறுவனத்தின் செய்தியை பார்த்து, தனக்கு இந்த யோசனை தோன்றியதாகவும் இதனை அனைத்து நிறுவனங்களும் செயல்படுத்த முன்வர வேண்டும் என்றும் தெரிவிக்கிறார் ஷ்ரேயம்ஸ் குமார்.