கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்:போலீஸ் குவிப்பு
சென்னை:கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருவதால், மெரினா கடற்கரையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில் விளைநிலங்களுக்கு இடையே ஓ.என்.ஜி.சி., நிறுவனம் அமைத்துள்ள எண்ணெய்க் கிணறுகளின் பைப் லைன்களில் சில நாள்கள் முன்னர் தீடீரென கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியைப் பார்வையிட வந்த அதிகாரிகளை அனுமதிக்க பொதுமக்கள் மறுத்துவிட்டனர். அங்கு வந்த போலீஸாருக்கும் போராட்டம் செய்யும் மக்களுக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மர்ம நபர்கள், குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்குத் தீ வைத்ததால் அங்கு வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நாங்கள் தீ வைக்கவில்லை என்று மறுத்தனர். போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்தனர். அவர்களை விடுவிக்க கோரி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்றது.
இதனிடையே ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டுப்பிரசுரம் கொடுத்த சேலத்தைச் சேர்ந்த வளர்மதி என்ற கல்லூரி மாணவியை போலீஸார் ஜூலை 12-ம் தேதி கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, ஜூலை 17-ம் தேதி அவரை குண்டர் சட்டத்தின்கீழ் தமிழக அரசு கைது செய்தது. இது மக்களின் மத்தியில் கோவத்தை அதிகரித்தது. இந்நிலையில் கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனால் மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.