வெள்ளை மாளிகையில் தலைமைப் பொறுப்பு ஏற்கும் இந்திய பெண்!
உலக அரங்கில் மிகப்பெரிய நிர்வாகப் பதவிகளை இந்திய வம்சாவளியினர் அலங்கரிப்பது அன்றாடச் செய்தியாக மாறிவிட்டது. இந்தியாவில் உள்ள மனித வளம் உலக வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வருவதற்கான பல உதாரணங்கள் காணக்கிடைக்கின்றன. இந்த வரிசையில் தற்பொழுது இடம்பெற இருக்கிறார் நியோமி ராவ். ஆம்! இவர் வெள்ளை மாளிகை நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் அமர உள்ளார்.
அமெரிக்க அதிபர் குடியிருக்கும் வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளிப் பெண் முக்கியப் பதவி வகிக்க உள்ளார். இங்குள்ள தகவல் மற்றும் கட்டுப்பாடுகள் விவகார அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பில் 44 வயதேயான நியோமி ராவ் நியமிக்கப்பட உள்ளார். இது தொடர்பாக அமெரிக்க பார்லிமென்டில் செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் நியோமி 54க்கு 41 ஓட்டு விகிதத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் வழியாக வெள்ளை மாளிகையின் தகவல் மற்றும் கட்டுப்பாடுகள் விவகார அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பில் நியோமி நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டால் வெள்ளை மாளிகை நிர்வாக விவகாரங்களை நியோமி கவனித்துக் கொள்வார்.