2020-ன் சிறந்த பரிசு.. மெக்ஸிகோவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை போட்ட செவிலியர் பேச்சு!
2020 ஆம் ஆண்டில் இதுவே எனக்கு கிடைத்த சிறந்த பரிசு என மெக்ஸிகோவில் கொரோனா தடுப்பு மருந்தை செலுத்திய செவிலியர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்பொழுது கொரோனா பரவல் குறைய தொடங்கியது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, ஃபைசர் தடுப்பூசிக்கு அவசர கால ஒப்புதலுக்கு பிறப்பிக்கப்பட்டு, இங்கிலாந்தில் போடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் மெக்ஸிகோவிலும் ஃபைசர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய நிலையில், அதனை முதல் முதலாக 59 வயதான மரியா ஐரீன் ராமிரெஸ் என்ற செவிலியர் போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொண்டது குறித்து பேசிய அவர், “2020 ஆம் ஆண்டில் இதுவே எனக்கு கிடைத்த சிறந்த பரிசு” என கூறினார். மேலும், முதற்கட்டமாக 3,000 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டதாகவும், இரண்டாம் கட்டமாக 50,000 தடுப்பூசிகளை போட திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.