பெய்ரூட் குண்டுவெடிப்பு.. ஏற்பட்ட சேதத்தை செயற்கைக்கோள் மூலம் வெளியிட்ட நாசா..!
லெபனானில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 100 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் 4,000- க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக லெபனான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த விபத்து இதனால் நடந்தது என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. இந்த விபத்தால் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சேதத்தை ஏற்படுத்தியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாசாவின் இமேஜிங் மற்றும் பகுப்பாய்வு குழு மற்றும் சிங்கப்பூரின் பூமி ஆய்வகத்துடன் இணைந்து, செயற்கைக்கோள் மூலம் பெறப்பட்ட செயற்கை துளை ரேடாரை பயன்படுத்தி பெய்ரூட்டில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் ஏற்பட்ட சேதத்தின் அளவின் புகைப்படத்தை வெளிட்டு உள்ளது.
விண்வெளியில் இருந்து செயற்கை துளை ரேடார் பூகம்பம் போன்ற ஒரு பெரிய நிகழ்வுக்கு முன்னும் பின்னும் நிலத்தில் ஏற்பட்ட மேற்பரப்பு மாற்றங்களைக் காட்டுகிறது. இந்நிலையில், இந்த வெடி விபத்தில் ஏற்பட்ட பயங்கர சேதத்தை இது காட்டுகிறது.
நாசா வெளியிட்ட வரைபடத்தில், பெய்ரூட் துறைமுகத்திலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் இருண்ட சிவப்பு பிக்சல்கள் – மிகக் கடுமையான சேதத்தைக் குறிக்கின்றன. ஆரஞ்சு நிறத்தில் உள்ள பிக்சல்கள் மிதமான சேதத்தையும், மஞ்சள் நிற பிக்சல்கள் ஓரளவு குறைவான சேதத்தை குறிக்கிறது. மேலும், ஒவ்வொரு பிக்சலும் 30 மீட்டர்பரப்பளவைக் குறிக்கிறது.
இது போன்ற வரைபடங்கள் மக்களுக்கு உதவி தேவை செய்ய மோசமாக சேதமடைந்த பகுதிகளை அடையாளம் காண உதவும்.