விண்வெளியில் மாட்டிறைச்சி – நாசாவின் அசத்தலான முயற்சி!
சர்வதேச விண்வெளி மையத்தில் மாட்டு இறைச்சியை இயற்கை முறையில் வளர்க்க நாசா தயாராகி வருகிறது.அந்த வகையில், மாடுகளில் இருந்து எடுக்கப்படும் செல்களை பயோரியாக்டர்களைப் பயன்படுத்தி,ஸ்டெம் செல்களாக மைக்ரோ கிராவிட்டியில் வளர்த்து, அவற்றை மாடுகளில் உள்ளது போன்று தசை திசுக்களாக மாற்றும் முயற்சியில் நாசா ஈடுபட்டுள்ளது.
இந்த தசை திசுக்களை உணவாக சமைத்தால் இறைச்சி போன்ற சுவையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.நாசாவின் இந்த அசத்தலான முயற்சியால் இறைச்சி உண்பதற்காக விலங்குகள் கொல்லப்படுவது தடுக்கப்படும்.
மேலும்,இந்த செயல்முறை விண்வெளியில் வெற்றிகரமாக இருந்தால், விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் நீண்ட காலப் பணிகளுக்காக தங்கள் சொந்த ஊட்டச்சத்து உணவை உருவாக்க முடியும்.
ஆனால்,ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டே அலெஃப் ஃபார்ம்ஸ் என்ற உணவு தொழில்நுட்ப நிறுவனம் இந்த முயற்சியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.ஆனால்,விண்வெளியில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய இறைச்சி துண்டின் விலை இந்திய மதிப்பில் ரூ.3 ஆயிரம் என்று அந்நிறுவனம் அறிவித்திருந்தது.மேலும்,சிங்கப்பூரில் இத்தகைய இறைச்சி விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.