எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய பஜாஜ் செட்டாக்!
பஜாஜ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான செட்டாக், இந்திய சந்தை விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
பஜாஜ் நிறுவனம், இந்தாண்டு தொடக்கத்தில் தனது புதிய “செட்டாக்” என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. மேலும் இது, பஜாஜ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகும். இந்த “செட்டாக்” ரக ஸ்கூட்டர்கள், புனே மற்றும் பெங்களூர் நகரங்களில் மட்டும் விற்பனை செய்து வருகிறது.
இந்த செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், அர்பேன் மற்றும் பிரீமியம் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஸ்கூட்டரில் 3kWh லித்தியம் திறன் கொண்ட அயன் பேட்டரி மற்றும் 4KW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது, எலக்ட்ரிக் பைக்கின் என்ஜின் என்று அழைக்கப்படும். அதுமட்டுமின்றி, இந்த ஸ்கூட்டர் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடும் எனவும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 90 வரை பயணிக்கலாம் எனவும், இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணிநேரம் ஆகும் என நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், செட்டாக் ரக ஸ்கூட்டரின் துவக்க விலை, ரூ. 1.15 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஸ்கூட்டர், தொடக்கம் முதலே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், இந்த வகையான ஸ்கூட்டர் மாடல் ஆயிரம் யூனிட்களை கடந்து விற்பனை செய்துள்ளதாக பஜாஜ் நிர்வாகம் கூறியது. கொரோனா ஊரடங்கால் விற்பனை சரிந்துள்ளதாக கூறிய பஜாஜ் நிறுவனம், தற்பொழுது இதன் விற்பனை கணிசமாக உயரதொடங்கியதாகவும், செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து கொண்டே வருவதாகவும் பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.