அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் அண்ணனும் தம்பியும் நடிக்கிறார்களா.?
மலையாள மெகா ஹிட் படத்தின் தமிழ் ரீமேக்கில் சினிமா சகோதரர்களான சூர்யா மற்றும் கார்த்தி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சச்சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும் ‘. அய்யப்பன் என்ற போலீஸ் அதிகாரியாக பிஜூ மேனனும், கோஷியாக பிருத்விராஜூம் நடித்திருந்தார்கள். மேலும் கவுரி நந்தா, அன்னா ராஜன், ரஞ்சித் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 50கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்வதாகவும், அதனை வெற்றி படமான ஜிகர்தண்டா படத்தை தயாரித்த ஃபை ஸ்டார் கதிரேசன் அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது . மேலும் இந்த படத்தில் சசிகுமார் மற்றும் ஆர்யா காம்போ, சரத்குமார், தனுஷ், விஜய் சேதுபதியின் பெயர்கள் அடிப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சினிமா சகோதரர்களான சூர்யா மற்றும் கார்த்தி நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை இருவரும் எந்த படத்திலும் இணைந்து நடிக்கவில்லை. இந்த படத்தில் இவர்கள் நடிப்பது மட்டும் உண்மையெனில் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் இதுவரை இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தின் ரிலீஸ்க்காக காத்திருக்கும் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், ஹரியின் அருவா படத்திலும், கே. வி. ஆனந்த் இயக்கத்தில் அயன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் கமிட்டாகியுள்ளார். மேலும் கார்த்தி சுல்தான் படத்தில் ரஷ்மிகாவிற்கு ஜோடியாகவும், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார்.