இந்திய பயணத்தை தவிர்த்திடுங்கள் – அமெரிக்க நோய்க்கட்டுப்பாடு மையம் அறிவுறுத்தல்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதால் இந்தியாவிற்கு பயணம் செய்வதை தவிர்த்து விடுங்கள் என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நாளுக்கு நாள் பல ஆயிரக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். இந்தியா முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளதால் பல நாடுகள் இந்தியாவிற்கான பயணம் மற்றும் இந்திய விமானங்கள் தங்கள் நாடுகளுக்குள் வருவதை தவிர்த்துள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இந்திய பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் தங்கள் நாட்டில் உள்ளவர்களுக்கு சில அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.
அதாவது, இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்தியாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும், முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகள் கூட புதிய வகை கொரோனாவுக்கு ஆளாகக் கூடிய அபாயம் இருப்பதால் இந்திய பயணத்தை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் எனவும், அப்படி கண்டிப்பாக இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தால் அதற்கு முன்பதாக முழுமையான தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.