வாழ்க்கையை புதைகுழியில் தள்ளும் புகை பழக்கத்தை தவிர்ப்போம்! புதிய துவக்கத்திற்கு வித்திடுவோம்!
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே புகை பழக்கத்திற்கு அடிமைகளாகியுள்ளனர். புகை பழக்கம் நமது வாழ்வை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து, கடைசியில் புதைகுழியில் தள்ளி விடுகிறது.
இன்று குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளோடு உறவு கொண்டாட வேண்டிய குடும்ப தலைவர்கள், புகையோடு உறவு கொண்டாடுகின்றனர். ஆனால், இந்த உறவு ஒருநாள் புதைகுழியில் தள்ளி வாழ்க்கையை முழுவதுமாக புதைத்து, குடும்பத்தை நாடு தெருவில் கொண்டு வந்து விடுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மே- 31ம் தேதி புகையிலை எதிர்ப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இது குறித்த விழிப்புணர்வு இருந்தாலும், புகை பழக்கத்திற்கு அடிமையாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் போகிறது. இன்றைய சூழலில் இளம் தலைமுறையினரும், இளம் பெண்களும் கூட புகை பழக்கத்திற்கு ஆளாகின்றனர்.
புகை பிடிப்பவர்களை விட, புகை பிடிப்பவர்களின் அருகில் உள்ளவர்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். புகை பிடிப்பதால், நுரையீரல் புற்றுநோய், சுவாச பிரச்சனைகள் போன்ற நோய்கள் ஏற்பட்டு, நீண்ட நாள் வாழ வேண்டிய நமது வாழ்க்கையை, மிக விரைவில் முடித்து விடுகிறது.
தனிமை என்னும் சிறையில் சிக்குண்டவர்களை, எந்த ஒரு தீய பழக்கமும் மிகவும் எளிதாக அடிமைப்படுத்தி விடுகிறது. வாழ்க்கையில் பொருளாக இருந்தாலும் சரி, எந்த பழக்கமாக இருந்தாலும் சரி, நமக்கு அவை அடிமைகளாக இருக்க வேண்டுமே தவிர, என்றைக்குமே அவைகளுக்கு நாம் அடிமைகளாக கூடாது.
ஒரு ஆண்டிற்கு 80 லட்சம் பேர் புகை இலை பயன்படுத்துவதால் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. புகை இலை எதிர்ப்பு தினமான இன்று, புகைப்பழக்கத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கான முயற்சி எடுப்போம். நம்மை அடிமைகளாக்கி உள்ள தீய பழக்கங்களில் இருந்து விடுதலை பெறுவோம்.