1 கப் அவல் இருந்தால் கிரிஸ்பியான ஸ்னாக்ஸ் எளிமையாக செய்யலாம்..!
அவல் ஒரு ஆரோக்கியமான உணவுப்பொருள் என்றாலும் அதனை குழந்தைகள் விருப்பமாக உண்பதில்லை. ஆனால், அவலை கிரிஸ்பியான ஃபிங்கர் ரோல் போல் செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். இதனை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: அவல்-1 கப், கடலை மாவு-1/2 கப், சீரகம் – 1/2 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய மல்லித்தழை சிறிதளவு, சாட் மசாலா – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்.
செய்முறை: முதலில் அவலில் கால் கப் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். அவல் நன்கு மசியக்கூடிய நிலையில் இருந்தால் தண்ணீரை வடிகட்டி வேறு பாத்திரத்தில் அவலை மாற்றி வைத்து கொள்ளுங்கள். அதிக தண்ணீர் சேர்த்துவிட்டால் ஸ்னாக்ஸ் செய்ய சரியாக வராது. அதனால் குறைந்த தண்ணீர் சேர்த்து தான் ஊற வைக்க வேண்டும். அடுத்தபடியாக அடுப்பில் கடாயை வைத்து கடலை மாவை சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம், பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். தற்போது அடுப்பை அணைத்து விட வேண்டும். பாத்திரத்தில் ஊறிய அவலில் தாளிப்பு செய்த பொருளை சேர்த்து அதனுடன் வறுத்த கடலைமாவையும் சேர்த்து கொள்ள வேண்டும்.
மேலும் இதனுடன் சாட் மசாலா, கரம் மசாலா, மல்லித்தழை, மிளகாய் தூள்,தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. சப்பாத்தி மாவை விட கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். இந்த மாவை சிறிது சிறிதாக எடுத்து ஃபிங்கர் ரோல் போல் செய்து எடுத்து கொள்ளுங்கள். அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், அதில் உருட்டி வைத்துள்ள ஃபிங்கர் ரோல்களை சேர்த்து பொன்னிறம் வந்ததும் எடுக்க வேண்டும். அவ்வளவு தான் சூடான கிரிஸ்பியான அவல் ஃபிங்கர் ரோல் ரெடி.