ஜிஎஸ்டி வரிவிதிப்பால் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை கடும் சரிவு…
இந்தியாவில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக கார் உள்ளிட்ட மோட்டார் வாகன விற்பனை கடும் சரிவை கண்டுள்ளது. இதனால் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, GST வரி விதிப்பால் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதால் அசோக் லைலேண்ட், மாருதி, மஹிந்திரா, BOSCH இந்தியா போன்ற பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் பெரும் பகுதி உற்பத்தியை நிறுத்தி வருகின்றன. இந்தியாவில் நடப்பு ஆண்டு கார் விற்பனை 8.77% சரிவைச் சந்தித்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், பிப்ரவரி மாதம் நாடுமுழுவதும் 2,51,516 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. அதாவது கார் விற்பனையை பொறுத்தவரையில் 8.77 சதவீத வீழ்ச்சியுடன் 1,56,285 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.