துனிசியாவில் ஆட்சிக்கலைப்பு – நிர்வாகத்தை தானே கையில் எடுத்துக்கொள்வதாக அதிபர் அறிவிப்பு!!
துனிசியாவில் அரசை கலைத்து, நிர்வாகத்தை தானே கையில் எடுப்பதாக அந்நாட்டு அதிபர் கைஸ் சையத் அறிவித்துள்ளார்.
ஆப்ரிக்கா நாடான துனிசியாவில் அரசு கலைக்கப்படுவதாகவும், நாடாளுமன்றமும் கலைக்கப்படுவதாகவும் அந்நாட்டு அதிபர் கைஸ் சையத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நாட்டின் நிர்வாகத்தை தானே கையில் எடுத்துக்கொள்வதாகவும், தனக்கு உதவ பிரதமர் ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் துனிசியா அதிபர் கைஸ் சையத் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கலைப்பு முடிவை ஆதரிக்கும் வகையில் துனிசிய நகரங்களில் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டு வீசினர். அதிபரின் முடிவை சில கட்சிகள் கண்டித்திருந்த போதிலும், ஆட்சிக்கலைப்புக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, கொரோனா வைரஸ் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான துனிசியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தவறியதாக அந்நாட்டு மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்ததன் காரணமாக அந்நாட்டு அரசை கலைத்து அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின்படி, துனிசியா பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டும், அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கலைப்பு காரணமாக துனிசியா நாட்டில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இஸ்லாமிய ஈர்க்கப்பட்ட என்னாதா கட்சிக்கு (Islamist-inspired Ennahdha party) எதிராக ஆயிரக்கணக்கான துனிசியர்கள் பல நகரங்களில் போராட்டங்கள் நடத்தினர்.
அரசாங்கத்தின் தோல்விகள் மற்றும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு தவறியதாக குற்றசாட்டியுள்ளனர். இதனிடையே, துனிசியா அதிபர் பேஜி சைட் எஸ்ஸெப்ஸி கடந்த வருடம் ஜூலை மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக அக்டோபரில் அங்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 72.71 சதவீதம் வாக்குகளைப் பெற்ற கைஸ் சையத் அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.