புர்கினா பாசோ தாக்குதல் : பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் உட்பட 80 பேர் உயிரிழப்பு!
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவில் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 80 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவில் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகள் 2015 ஆம் ஆண்டு முதல் நடத்திய தாக்குதலில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அந்த நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பொதுமக்களை அழைத்து சென்ற ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில் பலர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை இந்த தாக்குதலில் 59 பொதுமக்கள் 6 அரசு சார் போராளிகள் மற்றும் 15 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக உயிரிழப்பு 80 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மருத்துவமனைகளிலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.