“போர் மண்டலத்திற்கு வெளியே உள்ள நகரங்களை அர்மீனியா தாக்குகிறது” – அஜர்பைஜான் குற்றசாட்டு!
போர் மண்டலத்திற்கு வெளியே உள்ள நகரங்களை ஆர்மீனியா குறிவைத்து தாக்குவதாக அஜர்பைஜான் குற்றம்சாட்டியுள்ளது.
நகோர்னோ-கராபத் பகுதிகளை 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனியா ஆதரவு மக்கள் வசித்து வந்தனர். அதற்கான உதவிகளை அர்மீனியா நாட்டு அரசு செய்துவந்தது.
அசர்பைஜான் ராணுவத்தினர், நகோர்னோ-கராபத் பகுதிகளில் கடந்த 27 ஆம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினார்கள். அந்த தாக்குதலுக்கு பதிலடியாக நகோர்னோ-கராபத் மாகாணத்தில் உள்ள அர்மீனிய ஆதரவு படையினரும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
தற்பொழுது அந்த மோதல், போராக மாறிய நிலையில், பயங்கர ஆயுதங்களை கொண்டு இருதரப்பும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போரில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை நிறுத்த இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே வருகிறது.
இந்நிலையில், அசர்பைஜான் நாட்டின் இரண்டாம் பெரிய நகரமான கஞ்சா மற்றும் மிஞ்சசேவியர் பகுதிகளில் அர்மீனியா ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாக அசர்பைஜான் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அந்த பகுதிகள், போர் மண்டலத்திற்கு வெளியே உள்ள நகரங்கள் என விளக்கமளித்துள்ளது. தாங்கள் எந்தவிதமான தாக்குதல் நடத்தவில்லை என அர்மீனியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.