பாலூட்டும் தாய்மார்களா நீங்கள்…? ஆரோக்கியமான முறையில் தாய்ப்பால் அதிகம் சுரக்க இதை செய்யுங்கள்!
பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் அருந்தினால் தான் ஆரோக்கியமாகவும், போதிய சத்துக்களுடனும் வளர முடியும் என்பது அனைவருக்குமே தெரிந்தது தான். தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு அழகு குறைந்து விடும் என்று சொல்வது முற்றிலும் பொய். தாய்ப்பால் கொடுப்பதால் மட்டுமே நோயிலிருந்து பாதுகாத்து, ஆரோக்கியமாக வளர்க்க முடியும். எனவே, தாய்ப்பால் கொடுக்காமல் இருக்கவே கூடாது.
நம்மை நம்பி இந்த உலகிற்கு வந்த குழந்தைகளுக்கு நாம் போதிய சத்து கொண்ட நமது தாய்ப்பாலை தான் முதன்மை உணவாகக் கொடுக்க வேண்டும். ஆனால் சிலர் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று விரும்பினாலும், போதியளவு தாய்ப்பால் சுரக்காததால் குழந்தைகளுக்கு வேறு ஏதேனும் செயற்கையான உணவுகளை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
பிறந்த குழந்தைக்கு நிச்சயம் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் தவிர வேறு எந்த உணவும் கொடுக்கக்கூடாது. அதன் பின் சில ஆரோக்கியமான உணவுகளை கொடுத்தாலும் ஒரு வருடங்கள் வரை தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் தனது வாழ்நாளில் ஆரோக்கியமாக வாழ முடியும். இன்று தாய்ப்பால் அதிக அளவில் சுரப்பதற்கு சில இயற்கையான வழிமுறைகளை அறிந்து கொள்வோம் வாருங்கள்.
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க
- பெருஞ்சீரகம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. இந்த பெருஞ்சீரகத்தில் டீ செய்து, தேன் கலந்து பருகி வர தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
- ஆலம் விழுது, ஆலம் விதை ஆகியவற்றை கஞ்சி போல காய்ச்சி தாய்மார்கள் சாப்பிடுவதாலும் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
- சதகுப்பை எனும் கீரையை தாய்மார்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளும் பொழுது குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.
- அதி மதுரம் பொடியை சர்க்கரையுடன் கலந்து குடித்து வர தாய்பால் சுரக்கும்.
- அதுபோல பிரசவத்திற்கு முன்பும், பின்பும் பேரிச்சம் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் தாய்ப்பால் சுரக்க வழிவகுக்கும்.
- வெந்தயத்தை பாலில் சேர்த்து காய்ச்சி, சிறிதளவு சர்க்கரை சேர்த்து குடித்து வரும் பொழுதும் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
- தாய்ப்பால் அதிகம் சுரக்க வேண்டும் என விரும்புபவர்கள் முருங்கை கீரை மற்றும் அகத்திக் கீரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.