நெருங்கும் மக்களவை தேர்தல்… தொகுதி வியூகத்தை மாற்றுகிறதா திமுக?.. வெளியான தகவல்!
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தயராகி வருகின்றனர். ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காகவே 26 கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. தமிழகத்திலும், வரவிருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஆளும் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று ஆயுதமாகி வருகிறது.
தேர்தலுக்கான ஏற்பாடுகளும் ஒருபக்கம் நடந்து வரும் நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலின், அனைத்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், நாளை முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், மக்களவை தேர்தல் விவகாரம், கூட்டணி, தேர்தல் பணிகள், பூத் கமிட்டி உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதனிடையே, ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவது முக்கிய வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில், மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இருப்பதால் மக்களவை தேர்தலில் யாருக்கு எவ்வளவு தொகுதி, எந்த தொகுதி வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக திமுக வியூகம் வகுத்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்றம் மக்களவை தேர்தலில் தொகுதி வியூகத்தை திமுக மாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூருக்கு, சிவகங்கை தொகுதி ஒதுக்க இருப்பதாகவும், விருதுநகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடக்கூடும் என்பதால், அவருக்கு எதிராக கார்த்திக் சிதம்பரத்தை களமிறக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
சிவகங்கை தொகுதி எம்பி காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரத்துக்கு தேனி தொகுதியை ஒதுக்க பரிசீலினை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவை தேர்தலில் களமிறக்க திமுக வலியுறுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு போட்டியிட விருப்பமில்லை என துரை வைகோ ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.
மேலும், கூட்டணி கட்சிகளிடம் பூத் கமிட்டி பட்டியலை திமுக மேலிடம் கேட்டுள்ளதாகவும், விருப்பப்பட்ட தொகுதிகளின் பட்டியலை கூட்டணி கட்சிகளிடம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே வேளையில், கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பேச்சுவார்த்தையை திமுக தொடங்கி உள்ளது. எனவே, மக்களவை தேர்தலில் கூட்டணிகளுக்கு தொகுதிகளை மாற்றி வழங்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.