அமெரிக்காவில் மற்றொரு கறுப்பின இளைஞர் சுட்டுக்கொலை.. வெடிக்கும் போராட்டம்!
அமெரிக்காவில் பிலாடெல்பியா நகரில் 27 வயதான “வால்டர் வாலஸ்” என்ற கருப்பினத்தவர், போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, அமெரிக்கா மட்டுமின்றி, பல உலக நாடுகளில் கடுமையான போராட்டங்கள் நடந்து வந்தது.
அந்த சம்பவம் நடந்து முடிந்து சிறிது காலங்களே ஆன நிலையில், தற்பொழுது அமெரிக்காவில் மேலும் ஒரு கறுப்பினத்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தவகையில், பிலாடெல்பியா நகரில் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் 27 வயதான “வால்டர் வாலஸ்” என்ற கருப்பினத்தவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
போராட்டத்தின்போது அவர் கையில் கத்தி இருந்ததாக கூறப்படுகிறது. அதனை கவனித்த போலீசார், அவரை கத்தியை கிழே போடுமாறும் எச்சரித்தும் கத்தியை கீழே போட மறுத்த காரணத்தினால், அவரை சுட்டுக் கொன்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்று வருவதால், தற்பொழுது வால்டர் வாலஸ் உயிரிழந்ததை கண்டித்து வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காரணத்தினால் அங்கு வன்முறை வெடித்துள்ளது. இந்த போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்.