குட்நியூஸ்..!உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸை 99.9 சதவிகிதம் அழிக்கும் சிகிச்சை-ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடிப்பு….!
உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸை 99.9 சதவிகிதம் அழிக்கும் அரிய சிகிச்சை முறையை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்திலுள்ள கிரிஃப்த் (Griffith University) பல்கலைக்கழகத்தில்,சர்வதேச அறிவியலாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது.இதனால்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது.இதன்காரணமாக,கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு கட்டமாக, தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,கொரோனா வைரஸை 99.9 சதவிகிதம் அழிக்கும் அரிய சிகிச்சை முறை ஒன்றை,ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்திலுள்ள கிரிஃப்த் (Griffith University) பல்கலைக்கழகத்தில்,சர்வதேச அறிவியலாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.
இது குறித்து,ஆய்வின் தலைமை பேராசிரியர் நிகெல் மெக்மில்லன் கூறியதாவது,”1990களில் முதன்முதலாக ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஜெனீ சைலன்சிங்’ (gene-silencing) என்ற மருத்துவ தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு,கொரோனாவைத் தாக்க ஆர்என்ஏ என்னும் மரபுப்பொருளை பயன்படுத்தி இந்த சிகிச்சை முறையை உருவாக்கியுள்ளோம்.
அதன்படி,இந்த ஆர்என்ஏ மருந்தை மிக நுண்ணிய துகள்களான ‘நானோ பார்டிகில்ஸ்’ என்னும் துகள்களாக மாற்றி கொரோனா நோயாளியின் உடலுக்குள்,அதாவது இரத்தக்குழாய்களுக்குள் ஊசி மூலம் செலுத்தவேண்டும்.
அதன்பின்னர்,இந்த ஆர்என்ஏ வின் சிறு துகள்கள் ஏவுகணை போல் உடலில் சென்று கொரோனா வைரஸ் இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்து அதனை முழுமையாக செயலிழக்க செய்து விடும்.அதனால்,கொரோனா வைரஸால் நம் உடலில் இனப்பெருக்கம் முதலான எந்த வேலையும் செய்ய முடியாமல் தானாகவே அழிந்துவிடும்.மேலும்,ஒருவருடைய நுரையீரலில் வளரும் கொரோனா வைரஸ்களை இந்த முறையைப் பயன்படுத்தி முற்றிலும் அழிக்க முடியும்.
இருப்பினும்,இந்த சிகிச்சை முறை முழுமையாக வெற்றி பெற்று நடைமுறை பயன்பாட்டுக்கு வந்துவிட்டால்,உலகில் இனி கொரோனா மரணங்கள் இருக்காது”,என்று கூறினார்.