சிரியாப் போரின் அடுத்த கட்டம்…??
சிரியாப் போர் தற்போது வேறொரு கட்டத்தை வந்தடைந்துள்ளது. குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அப்ரின் நகரம், எல்லை மீறிப் படையெடுத்து வந்த துருக்கிப் படைகளிடம் வீழ்ந்துள்ளது. அதை அடுத்து, அந்நிய இராணுவம் ஒன்று சிரியாவின் பகுதியை ஆக்கிரமித்துள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து துருக்கிப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று, சிரியா அரசு ஐ.நா. மன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
அப்ரின் நகரை கைப்பற்றிய துருக்கி இராணுவம் தனியாக வரவில்லை. சிரிய அரசுக்கெதிராக போரிடும் ஜிகாதிக் குழுக்களையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு வந்துள்ளது. மதவாத தீவிரவாதிகள் அப்ரின் நகரை நாசமாக்குவதையும், பொது மக்களை மிரட்டுவதையும் துருக்கி இராணுவம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறது.
துருக்கி இராணுவம் அப்ரின் நகரை கைப்பற்றிய வெற்றி மிதப்பில், பிற குர்திஷ் பிரதேசங்கள் மீதும் படையெடுக்க எத்தனிக்கலாம். அங்கு ஏற்கனவே அமெரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ளன. இதனால், துருக்கி இராணுவத்திற்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் மோதல் ஏற்படும் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.
ஏற்கனவே, ஈராக்கி துருக்கிஸ்தான் மீதான துருக்கி படை நடவடிக்கையின் போதும், அங்கு அமெரிக்க இராணுவம் நிலைகொண்டிருந்தது. அப்போதும் இரண்டு படைகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால், அது “அமெரிக்க-துருக்கி யுத்தமாக” பரிணமிக்கவில்லை.
அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் எப்போதும் தமது நலன்களை மட்டுமே முன்னிலைப் படுத்துகின்றன. சிலநேரம், ஒரு சிறுபான்மையினத்தவரின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதாக நாடகம் ஆடும். ஆயுத உதவிகளும் வழங்கலாம். இராணுவ பாதுகாப்புக் கொடுக்கலாம்.
அதற்காக, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் அங்கே ஒரு தனி நாட்டை அங்கீகரிப்பார்கள் என்று அர்த்தம் அல்ல. இது தான் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள குர்திஸ் பிரதேசங்களில் நடந்தது. எதற்கெடுத்தாலும் அமெரிக்காவிடம் நீதி கேட்கும் ஈழத் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது. அமெரிக்காவை நம்பினால், இக்கட்டான தருணத்தில் நட்டாற்றில் தவிக்க விட்டு ஓடி விடுவார்கள்.