எதிர் எதிர் துருவங்கள் சந்திப்பு..!
பேச்சு, செயல் அனைத்திலும் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் 2 தலைவர்கள் தங்கள் பகையை மறந்து கட்டித்தழுவ இருக்கின்றனர்.
எலியும், பூனையுமாக முறைத்துக்கொள்ளும் இரண்டு நாடுகள் ஒரே அலைவரிசையில் பயணிக்க காத்திருக்கின்றன.
உலகுக்கே பெரியண்ணன் தோரணையில் வலம்வரும் அமெரிக்காவின் டொனால்டு டிரம்ப், கொரிய தீபகற்ப பகுதியை நடுங்க வைத்துக்கொண்டு இருக்கும் வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் அன் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க இருக்கின்றனர்.
இப்படி ஒரு நிகழ்வு நடைபெறும் என்று கடந்த மார்ச் மாதத்துக்கு முன்பு வரை யாராவது கூறியிருந்தால், அவர்களை மனநிலை பாதித்தவர் என்றுதான் அழைத்து இருப்பார்கள். காரணம்… இரு நாடுகளுக்கும் இடையேயான பகை அப்படி.
1948-ம் ஆண்டு ‘ஜனநாயக மக்களின் கொரிய குடியரசு’ என பிரகடனம் செய்தது முதலே அமெரிக்க எதிர்ப்பு நிலைதான் வடகொரியாவின் பிரதான கொள்கை.
வடகொரியாவை வீழ்த்துவதற்காகவே தென்கொரியாவில் ராணுவ நிலைகளை அமைத்து காத்து இருக்கிறது அமெரிக்கா.
இப்படி பரம வைரிகளாக வரிந்து கட்டிக்கொள்ளும் இரு நாட்டு தலைவர்கள் நேருக்குநேர் சந்திக்க இணங்கி இருப்பது நூற்றாண்டு காணாத நிகழ்வாகத்தானே இருக்க முடியும்.
அதனால்தான் இவர்களின் சமீபத்திய நகர்வுகளை உலக நாடுகள் மூக்கில் விரல் வைத்துக்கொண்டு பார்க்கின்றன. இருவரும் சந்திக்கப்போகும் 12-ந்தேதியை ஆவலோடு எதிர்நோக்கி இருக்கின்றன.
இந்த திடீர் வாய்ப்பை ஏற்படுத்தியது கிம் தான். சர்வதேச தலைவர்களுக்கும், ஐ.நா.வுக்கும் அடங்க மறுத்து ஆயுதக்குவிப்பு ஒன்றையே நோக்கமாக கொண்ட கிம்மின் போக்கில் கடந்த 2 மாதங்களாக மாற்றம் தெரிகிறது. அடக்குமுறை மற்றும் சர்வாதிகாரத்தையே தூக்கி பிடித்தவர் திடீரென அமைதியை விரும்பி இறங்கி வந்திருக்கிறார்.
கிம்மின் இந்த திடீர் மனமாற்றத்துக்கு ஆணிவேராக அமைந்தது, கடந்த மார்ச் மாதம் அவர் மேற்கொண்ட சீனப்பயணம். தனது முதல் வெளிநாட்டு பயணமாக சீனாவுக்கு ரகசியமாக சென்ற கிம், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகுதான் தனது போக்கை அவர் மாற்றிக்கொண்டார்.
முன்னதாக தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தனது நாட்டு வீரர்களை பங்குபெற வைத்ததன் மூலம் ஏற்கனவே அவர் தனது சாந்தமான முகத்தை காண்பித்து இருந்தார். எனினும் சீன அதிபருடனான சந்திப்புதான், அவரது மனமாற்றத்தை முழுவதுமாக உலகுக்கு உணர்த்தியதாக சர்வதேச வல்லுனர்கள் கணிக்கின்றனர்.
அதன்பின்னர் தென்கொரியா அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்தது, தனது நாட்டு அணு ஆயுத சோதனை தளத்தை அழித்தது என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார் அவர். அதன் தொடர்ச்சியாகத்தான் டிரம்புடனான இந்த சந்திப்பு நடக்கிறது.
இந்த சந்திப்புக்கு முதலில் திட்டமிட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்டு, இரு தலைவர்களும் மாறிமாறி அறிக்கை சாடல்கள் விடுத்தது…. இப்படி பல தடங்கல்கள் எழுந்தாலும், 12-ந்தேதி இந்த சந்திப்பு நடைபெறும் என ஒருவழியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும் திட்டமிட்டபடி இந்த சந்திப்பு நடைபெறுமா? என்ற சந்தேகமும் ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறது.
எது எப்படி இருந்தாலும் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததன் மூலம் இரு நாடுகளின் வரலாற்றில் கடந்த 65 ஆண்டுகளில் இல்லாத ஒரு அதிசயம் நிகழ்ந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். முந்தைய எந்த ஜனாதிபதியும் செய்யாத ஒரு புரட்சிகரமான அணுகுமுறையை டிரம்ப் மேற்கொண்டு இருக்கிறார்.
அமைதி உடன்படிக்கை மற்றும் வடகொரியாவின் அணுஆயுதங்கள் அழிப்பு போன்றவற்றை முன்னிறுத்தி அவர் நடத்த இருக்கும் இந்த சந்திப்பு ஒரு துணிச்சலான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. அதிகார தோரணையில் வலம்வரும் அவரது வலிமையும், திறனும் இந்த சந்திப்பு வெற்றியில்தான் அடங்கியும் இருக்கிறது.
ஆனால் நீண்ட இழுபறி மற்றும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நிகழ இருக்கும் இந்த சந்திப்பு அவ்வளவு எளிதில் வெற்றி பெறுமா? என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
ஏனெனில் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போகும் இரு தலைவர்களும் விசித்திரமான குணத்துக்கு சொந்தக்காரர்கள் மட்டுமின்றி, எதிரெதிர் எண்ணம் கொண்டவர்கள். அவர்கள் அடிக்கடி மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், உதிர்க்கும் வார்த்தைகளும் இதை உணர்த்தி விடுவதுண்டு.
சர்வாதிகாரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட கிம், தனது பதவிக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களையும், தனக்கு எதிரானவர்களையும் ஒழித்துவிடும் குணம் படைத்தவர். ராணுவ தளபதிகள், மந்திரிகள் என இதுவரை 350-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களை கொன்றிருக்கிறார். இவரது ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜாங் நாம் கடந்த ஆண்டு மலேசியாவில் கொல்லப்பட்டதன் பின்னணியிலும் கிம்மின் பெயரே அடிபடுகிறது.
அதேநேரம் அமெரிக்கா இதுவரை கண்ட ஜனாதிபதிகளிலேயே மிகவும் வித்தியாசமானவர் டிரம்ப். ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்திலேயே இவருடன் பணி செய்ய பிடிக்காமல் பல உயர்மட்ட அதிகாரிகள் பதவி விலகி இருக்கின்றனர். இவரும் தனக்கு ஒத்துவராத அதிகாரிகள் பலரை மாற்றி இருக்கிறார். சமீபத்தில்கூட தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகரை மாற்றி அதிர்ச்சி அளித்து இருந்தார்.
இப்படி ஏட்டிக்கு போட்டியாக நடந்து கொள்ளும் இரு தலைவர்கள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினையை ஒரே கோணத்தில் எப்படி அணுகுவார்கள் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்த சந்திப்பு விவகாரத்திலும் கூட இருவரும் ஒருவரையொருவர் எந்த அளவுக்கு குறைவாக மதிப்பிட்டுள்ளனர்? என்பதை அவர்களது சமீபத்திய கருத்துகள் உலகுக்கு வெளிப்படுத்தி இருந்தன.
ரியல் எஸ்டேட் துறை மூலம் முன்னுக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கிம் ஜாங் அன்னை சக ரியல் எஸ்டேட் போட்டியாளராகவே பார்க்கிறார். வடகொரியாவின் எதிர்கால வளர்ச்சியை சுட்டிக்காட்டியே அணுஆயுத பிரச்சினைக்கு அவர் பேரம் பேசி வருகிறார். இதற்காக முதலில் அச்சுறுத்தல், பின்னர் ஆசை காட்டுதல், அதைத்தொடர்ந்து அவசியமற்ற புகழ்ச்சி என கிம்மை, அவர் எதிர்கொண்டு வரும் விதமே வித்தியாசமாக இருக்கிறது.
டிரம்பின் இந்த ரியல் எஸ்டேட் வழிமுறை வடகொரியாவின் அணுஆயுத அழிப்பில் எடுபடாது என்பதை அவரும், அவரது சகாக்களும் ஏற்கனவே உணர்ந்திருப்பார்கள் என்றே அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
ஏனெனில் பணமும், முதலீடும், தொழில்நுட்பமும் கிம்முக்கு தேவை என்பது என்னவோ உண்மைதான். ஆனால் தனது கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும் பாதுகாப்பு (அணு ஆயுதங்களை) துறையை வர்த்தகப்படுத்தவில்லை என்று அவர் தனதுநாட்டு உயர் வகுப்பினரை திருப்திபடுத்தியாக வேண்டும்.
வடகொரியாவின் அணுஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை உருவாக்குபவர்கள்தான் இந்த உயர்வகுப்பினர். அமெரிக்காவை சற்று தள்ளியே இருக்கச்செய்யும் இவர்களைத்தான் வடகொரியா, ஹீரோக்களாக கொண்டாடி வருகிறது. எனவே அவர்களின் சமரசத்தில்தான் வடகொரியாவின் பேச்சுவார்த்தை சூட்சுமம் அடங்கி இருக்கிறது.
இது குறித்து அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், கிளிண்டன் ஆட்சிக்காலத்தில் வடகொரியாவுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவருமான வில்லியம் பெர்ரி கூறுகையில், ‘நாட்டை வளப்படுத்துதல் என்பது அவர்களுக்கு (வடகொரியர்களுக்கு) இரண்டாம்பட்சம்தான். அவர்களுடன் பழகிய விதத்தில் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், தங்களின் பாதுகாப்பையே அவர்கள் தலையாயதாக கொண்டுள்ளனர்’ என்று தெரிவித்தார்.
இந்த பிரச்சினையை படிப்படியான நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்வதே ஒரே வழியாக இருக்கும் என்று கூறிய வில்லியம் பெர்ரி, ஆனால் இதை டிரம்ப் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அடுத்ததாக, இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெற வேண்டியது என்ன? என்பது குறித்து இரு நாடுகளும் இன்னும் ஒத்த கருத்தை எட்டவில்லை. ‘முற்றிலும், சரிபார்க்கக்கூடிய, மறுக்க முடியாத அணுஆயுத அழிப்பு’ என்ற கருத்துகளையே வடகொரியாவிடம் வலியுறுத்தி, அதுதொடர்பான ஒப்பந்தத்தை எட்டுவதே அமெரிக்காவின் ஒரே நோக்கமாக இருக்கிறது.
ஆனால் இது ஒரு சார்பான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. அணுஆயுத ஒழிப்பு என்ற மந்திரத்தை கிம்மும் பயன்படுத்தி வந்தாலும், ஆயுத கட்டுப்பாடு குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று அவர் விரும்புவதாக தெரிகிறது. தனது ஆயுதங்களில் ஒருபகுதியை விட்டுக்கொடுக்க முன்வந்திருக்கும் அவர், இதற்காக தென்கொரியாவில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெற்று வடகொரியாவை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை படிப்படியாக நிறுத்த வேண்டும் எனறு வலியுறுத்தி இருந்தார்.
இதற்கு அமெரிக்கா ஒப்புக்கொள்ளுமா என்பது தெரியவில்லை. ஏனெனில் கிம்-டிரம்ப் இடையிலான பேச்சுவார்த்தை நடந்தாலும் வடகொரியா மீதான தங்கள் அழுத்தம் தொடரும் என அமெரிக்க ஊடக செயலாளர் சமீபத்தில் கூறியிருந்தார்.
வடகொரியா தனது ஆயுதங்களை ஒரேயடியாக விட்டுத்தர வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி இருந்தாலும், இந்த விவகாரத்தில் படிப்படியான அணுகுமுறைக்கு அவர் ஒத்துக்கொள்வார் எனவும் தெரிகிறது. எனவே ஆயுதங்களை முற்றிலும் ஒழிப்பு என்ற விதிமுறை இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெறாது என்றே கூறப்படுகிறது.
இவ்வாறு அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என மிரட்டுவதற்கு பதிலாக, வடகொரியாவின் நிலைப்பாட்டுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும். ஏனெனில் வளர்ச்சியில் பின்தங்கி இருக்கும் வடகொரியாவுக்கு ஆக்கப்பூர்வ பயன்பாட்டுக்கு அணுசக்தியை உபயோகிக்க அனுமதி வழங்குவதுடன், அவர்களின் உணவு மற்றும் பிற தேவைகளையும் பூர்த்தி செய்ய வழிவகை காண வேண்டும் என்பதே சர்வதேச நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
ஒபாமா ஆட்சிக்காலத்தில் ஈரானுடன் கடந்த 2015-ம் ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்தத்தை விட சற்று வீரியமிக்க ஒப்பந்தம் ஒன்றை இந்த பேச்சுவார்த்தையின் போது டிரம்ப் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஈரானின் அணுஆயுதங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வகை செய்யும் அந்த ஒப்பந்தத்தில், அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்க வழிவகை செய்யப்படவில்லை. அதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதை இரு நாடுகளும் தொடர்ந்து கடைப்பிடித்தால் கொரிய தீபகற்பம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிலும் அமைதி நிலவும்.
3-ம் உலகப்போருக்கு வித்திடும் ஒரு நிகழ்வாக பார்க்கப்பட்ட அமெரிக்கா-வடகொரியா மோதல், இன்று அமைதி பேச்சுவார்த்தை என்ற சாதகமான கட்டத்தை அடைந்திருப்பதே மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி இரு நாடுகளும் அமைதி நடவடிக்கைகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்லுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பின்னணியில் சீனாவா?
உலகின் சமகால சர்வாதிகாரிகளில் முக்கியமானவராக கருதப்படுபவரும், தனக்கு கீழ்ப்படியாதவரை கொலை செய்யும் அளவுக்கு கொடூரமானவருமான கிம் ஜாங் அன் ஒரே வாரத்தில் அமைதி பிரசாரகராக மாறியிருப்பது நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கிறது. எனவேதான் கிம்மின் மனமாற்றத்துக்கு பின்னணியில் சீனா இருப்பதாக உறுதியாக கூறுகின்றனர் சர்வதேச வல்லுனர்கள்.
இதற்கு காரணங்களும் இல்லாமல் இல்லை. தெற்கு சீனக்கடல் பகுதி முழுவதையும் உரிமை கொண்டாடி வரும் சீனாவுக்கு, தென்கொரியாவில் ராணுவ நிலைகளை அமைத்து வேவுபார்த்து வரும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.
எனவே அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின் போது தென்கொரியாவில் இருந்து ராணுவ துருப்புகளை வெளியேற்றுவது தொடர்பாக ஒப்பந்தம் போடச்செய்ய வடகொரியாவை வலியுறுத்த செய்துள்ளது. இவ்வாறு அமெரிக்க படைகள் வெளியேறும் பட்சத்தில் அது வடகொரியா மட்டுமின்றி சீனாவுக்கும் நன்மையாக முடியும்.
இதன் அடிப்படையிலேயே கிம்மை சீனா பயன்படுத்தி இருப்பதாக கூறும் அரசியல் நிபுணர்கள், இந்த நடவடிக்கையால் வடகொரியா மக்களுக்கு எந்த நன்மையும் விளையப்போவதில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.
சிங்கப்பூரை தேர்வு செய்ய காரணங்கள்
நார்வே, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளில் மத்தியஸ்தம் செய்துள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் டிரம்ப் மற்றும் கிம் இடையிலான சந்திப்புக்கு சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக 3 முக்கியமான காரணங்களை இந்த இரு நாடுகளும் அடுக்கி உள்ளன. அவை வருமாறு:-
1. வடகொரியா மற்றும் அமெரிக்காவுடன் நல்லுறவை பேணி வருகிறது, சிங்கப்பூர்.
அமெரிக்காவுடன் நீண்ட காலமாக நட்புறவை பேணி வருகிறது சிங்கப்பூர். இரு நாடுகளுக்கு இடையிலான தாராள வர்த்தகத்துக்கு ஜார்ஜ் புஷ் காலத்திலேயே ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் கடந்த 2012-ம் ஆண்டு சிங்கப்பூரை முக்கியமான கூட்டாளி என்ற அந்தஸ்துக்கு ஒபாமா நிர்வாகம் உயர்த்தியது. 3 ஆண்டுகளுக்கு பின்னர் பாதுகாப்பு ஒத்துழைப்பில் இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன.
இதைப்போல வடகொரியாவுடனும் நீடித்த உறவை கொண்டுள்ள சிங்கப்பூர், கடந்த 1975-ம் ஆண்டு முதலே தூதரக உறவுகளை பேணி வருகிறது. வடகொரியாவும் சிங்கப்பூரில் தனது தூதரகத்தை திறந்து இருக்கிறது.
சிங்கப்பூரின் அண்டை நாடான மலேசியாவில் கடந்த ஆண்டு கிம்மின் சகோதரர் கொல்லப்பட்டது மற்றும் வடகொரியாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த தடைக்கு சிங்கப்பூர் ஆதரவு தெரிவித்தது போன்ற சம்பவங்களால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் சமீபத்தில் சற்று சுணக்கம் ஏற்பட்டாலும், தொடர்ந்து தங்கள் உறவை அவர்கள் பேணி வருகின்றனர்.
2. சர்வதேச பிரச்சினைகளில் நடுநிலைத்தன்மை
உலக நாடுகளுக்கு இடையே அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளில் சிங்கப்பூர் பெரும்பாலும் நடுநிலைத்தன்மையை பேணி வருகிறது. மேலும் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் நாடுகளுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தைக்கான தளத்தை ஏற்படுத்துவதிலும் அது முன்னணியில் இருக்கிறது.
கடந்த 2015-ம் ஆண்டு கூட சீன அதிபர் ஜின்பிங் மற்றும் அப்போதைய தைவான் அதிபர் மா யிங் ஜியூ இடையிலான சந்திப்பை சிங்கப்பூர் வெற்றிகரமாக நடத்தி இருந்தது. சீனாவில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த 1950-ம் ஆண்டுக்கு பிறகு இரு நாட்டு தலைவர்களும் அப்போதுதான் முதல் முறையாக சந்தித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
3. எளிதில் அடையும் வசதி
வடகொரியாவில் இருந்து குறைந்த நேர விமானப்பயணம் மூலம் சிங்கப்பூரை அடையலாம். இதை வசதியாக கருதும் கிம், தொலைதூர நாடுகளில் சந்திப்பை வைத்துக்கொண்டால் தனது உயிருக்கோ அல்லது பதவிக்கோ ஆபத்து நிகழலாம் என கருதுவதாக வடகொரியாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் வடகொரியாவின் காலாவதியான விமானங்களால் கிம் மற்றும் குழுவினரை ஏற்றிக்கொண்டு நீண்ட தூர பயணங்களைமேற்கொள்ள முடியாது என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர். எரிபொருள் நிரப்புவதற்கேனும் வழியில் இறங்கியே செல்ல வேண்டிய தர்ம சங்கடத்தை வடகொரியாவின் விமானங்கள் ஏற்படுத்தும் எனக்கூறும் அவர்கள், சிங்கப்பூரை தேர்வு செய்வதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.