600 சீன பிராண்டுகளுக்கு நிரந்தரமாக தடை விதித்த அமேசான்..!
போலி விமர்சனம் காரணமாக 600 சீன பிராண்டுகளை அமேசான் நிறுவனம் தடை செய்துள்ளது.
ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான அமேசான் 600 சீன பிராண்டுகளை நிரந்தரமாக தடை செய்துள்ளது.அதே நேரத்தில் இந்த பிராண்டை விற்கும் 3000 விற்பனையாளர்களின் கணக்குகளும் அகற்றப்பட்டது.அமேசான் நிறுவனத்தின் கொள்கைக்கு மாறாக செயல்பட்டதால் சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்,இது தொடர்பாக,அமேசான் நிறுவனம் கூறுகையில்:
“வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவம் வழங்க வேண்டும் என்பதற்காக கடினமாக அமேசான் உழைக்கிறது. எங்கள் தளத்தில் வாங்கும் பொருட்களை வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் வாங்கலாம் என்பதற்காகவே விமர்சனம் (ரிவீய்வூ) என்றொரு ஆப்ஷன் வைக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் அவர்கள் தேர்வு செய்யும் பொருட்களின் கீழ் ஏற்கெனவே அதனை வாங்கியோர் அளிக்கும் விமர்சனத்தை மிகவும் நம்பி,அதன் அடிப்படையில் பொருட்களைத் தேர்வு செய்கின்றனர்.இதனால் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் இருவருமே பயனடைகின்றனர். எனவே,வாடிக்கையாளர் விமர்சனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன
ஆனால்,இதனை சாதகமாக பயன்படுத்தி சில சீன நிறுவனங்கள் எங்களின் இந்தக் கொள்கைக்கு விரோதமாக செயல்பட்டுள்ளன. அவ்வாறாக விதிமுறை மீறும் நிறுவனங்கள் உலகின் எந்தவொரு பகுதியில் இருந்தாலும் அவைகள் தடை செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகளை உட்படுத்தப்படும். மாறாக,ஒரே நேரத்தில் 600 சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தனிப்பட்ட முறையிலான தாக்குதல் இல்லை. நாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் எங்களின் வாடிக்கையாளரின் நலன் கருதியே மேற்கொள்ளப்படுகிறது”,என்று தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக,சில சீன பிராண்ட்கள்,வாடிக்கையாளர்கள் தங்கள் பொருட்கள் பற்றி நல்ல விதமான கருத்துகளைப் பகிருமாறுக் கூறி,அதற்கு சலுகையாக கிஃப்ட் கூப்பன் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை அம்பலப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.