ஊரடங்கில் விதிகளை மீறி ஹெலிகாப்டரில் பயணம் செய்த அக்ஷய் குமார்.!
ஊரடங்கு காலத்தில் சிறப்பு அனுமதி பெற்று ஹெலிகாப்டரில் நாசிக்கிற்கு அக்ஷய் குமார் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அக்ஷய் குமார். இவர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் லட்சுமி பாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இவர் தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு அல்லாமல் வீட்டுக்கு வெளியே செல்ல கூடாது என்றும், ஒரு ஊரிலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல கூடாது என்றும் ஆணை விடுத்துள்ளது. இந்த நிலையில் தற்போது நடிகர் அக்ஷய் குமார் ஹெலிகாப்டரில் மும்பையில் இருந்து நாசிக்கிற்கு டாக்டரை சந்திக்க போவதாக கூறி சிறப்பு அனுமதி பெற்று சென்றுள்ளார்.
அங்குள்ள சொகுசு விடுதி ஒன்றில் அக்ஷய் குமார் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவருக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளித்ததை குறித்து சர்ச்சைகள் எழுப்பியுள்ளது. இதுகுறித்து மராட்டிய உணவுத்துறை மந்திரி ஷாகன் புஜ்பால் கூறியதாவது, அக்ஷய் குமார் சிறப்பு அனுமதி பெற்று ஹெலிகாப்டரில் நாசிக்கிற்கு சென்ற செய்தி ஊடகங்கள் மூலம் தெரிய வந்ததாகவும், அவர் தற்போது எங்குள்ளார் என்று தெரியவில்லை என்றும், இதுகுறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், யார் அவருக்கு சிறப்பு அனுமதி அளித்தது என்பதனையும், ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதிகாரிகளே பொறுப்பாவர் என்றும் தெரிவித்துள்ளார்.