தல அஜித்தின் முக்கிய அரசியல் நிகழ்வுகளின் சிறிய தொகுப்பு..!
மே 1-ஆம் தேதியான இன்று தல அஜித் தனது 49வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கடைசியாக அவர் பங்கேற்ற பொது நிகழ்ச்சி மேடை, வெளியிட்ட அறிக்கைகள், அரசியல் நிலைப்பாடு பற்றி சில முக்கிய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தல அஜித். இவரது படங்களை திருவிழாவென கொண்டாட ரசிகர் கூட்டம் எப்போதும் காத்திருக்கும். காரணம் இவரை திரையில் மட்டுமே காண முடியும், தன் வேலை நடிப்பது மட்டுமே, அதே போல மற்றவர்களும் தனது படங்களை பொழுதுபோக்கிற்காக பார்க்க வேண்டும். பிறகு அவர்கள் வேலையை பார்க்க வேண்டும் என்பது அஜித்தின் கருத்தியல். இதுதான் அஜித் என்ன செய்தாலும் ரசிகர்களை கொண்டாட வைக்கிறது.
அவர் 2010க்கு பிறகு பெரும்பாலும் எந்தவித பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை. எந்த ஒரு சமூக வலைதள பக்கத்திலும் அவர் தன்னை ஈடுபடுத்திகொள்ளவில்லை. தனது உட்சபட்ச அரசியலே ஒட்டு போடுவதுதான் என தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.
2010ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பாராட்டு விழாவில் பேசிய அஜித் ‘ நடிகர்களை கட்டாயப்படுத்தி விழாக்களுக்கு அழைக்கிறார்கள் எனவும் எங்களுக்கு அரசியல் வேண்டாம்.’ எனவும் கலைஞர் முன்னிலையில் மேடையிலேயே இதனை தெரிவித்தார். இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டினார்.
தனது 50வது படமான மங்காத்தா ரிலீசிற்கு முன்னர் தனது ரசிகர் மன்றங்களை கலைத்தார். ரசிகர்கள் தனக்காக எதுவும் செய்யக்கூடாது. அவர்கள் அவரவர் குடும்பத்தை பார்க்க வேண்டும் என தனது கருத்தை முன்னிறுத்தினார் அஜித்.
சென்ற ஆண்டு அஜித் ரசிகர்கள் சிலர் குறிப்பிட்ட கட்சியில் சேர்ந்ததாக செய்திகள் வெளியானது. அதனை தொடர்ந்து அஜித் உடனே அறிக்கை வெளியிட்டார். அதில், எனது உட்சபட்ச அரசியலே ஓட்டுபோடுவதுதான். எனது அரசியல் கருத்தை எனது ரசிகர்களுக்கு என்றைக்கும் திணிக்கமாட்டேன் என பகிரங்கமாக பதிவிட்டிருந்தார். இந்த அறிக்கை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
சில தினங்களுக்கு முன்னர் கூட வருகிற மே 1 அஜித் பிறந்த நாளை முன்னிட்டு இணையத்தில் சில திரை பிரபலங்கள் அஜித் பிறந்தநாளுக்கான புகைப்படத்தை வெளியிட இருந்தனர். இதனை அறிந்த அஜித் தற்போது கொரோனா பிரச்சனை நடைபெற்று கொண்டிருப்பதால் இந்த சமயம் எதுவும் வெளியிட வேண்டாம் என தனது அலுவலகம் வாயிலாக பிரபலங்களுக்கு தகவலை தெரிவித்தார்.
தனது வேலை நடிப்பது மட்டுமே, மற்ற நேரங்களில் தனது சொந்த விருப்பங்களை செய்துகொண்டு வருகிறார் தல அஜித். அதனையே ரசிகர்களுக்கும் அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறார். பொழுதுபோக்கிற்காக திரைப்படம் பாருங்கள் மற்ற நேரங்களை உங்கள் குடும்பத்திற்காக செலவிடுங்கள் எனபதே அவரது அறிவுறுத்தலாக உள்ளது. இந்த கருத்தியல்தான் அவர் மீது ரசிகர்கள் அதிக அன்பு வைக்க காரணமாக அமைகிறது என்பது நிதர்சனமான உண்மை.
தல அஜித்திற்கு தினச்சுவடு பத்திரிகை சார்பாக மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.