ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,100 ஆக அதிகரிப்பு..!
ஆப்கானிஸ்தானின் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 1,100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கிழக்கு ஆப்கானிஸ்தான் பாக்டிகா மாகாணத்தில் கடந்த புதன் கிழமை அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்டிலிருந்து 44 கி.மீ தொலைவில் 51 கி.மீ ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 255 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தானின் கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 1,100 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல் கூறப்படுகிறது.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பாக்டிகா மாகாணத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் அப்பகுதியில் வீடுகள் சேதமடைந்து உள்ள நிலையில், பாக்டிகாவில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன. முதற்கட்ட தகவல்களின்படி, பாக்டிகா, கயான் மாவட்டத்தில் 100 பேர் இறந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் துபாய் கிராமத்தில், கோஸ்ட் மாகாணத்தின் ஸ்பெரா மாவட்டத்தில் 20 பேர் சடலமாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டது.
இதற்கிடையில், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள சுமார் 119 மில்லியன் மக்களால் சுமார் 500 கிமீ தொலைவில் இந்த அதிர்வு உணரப்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தற்போது 1,100 பேர் உயிரிழந்தனர். பல கிராமங்களில் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் பெருமளவு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானிற்கு ஈரான், கத்தார், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றது. இந்தியாவிலிருந்து முதல்கட்ட நிவாரண பொருட்கள் தலைநகர் காபூல் சென்று சேர்த்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மீட்பு நடவடிக்கைகளுக்காக கனரக இயந்திரங்களையும் இந்தியா ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.