ஆப்கான் மருத்துவமனை தாக்குதல் : ஐஎஸ் அமைப்பின் கோராசான் பிரிவு பொறுபேற்பு!
ஆப்கானிஸ்தான் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பின் கோராசான் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க இராணுவப் படைகள் முழுவதும் வெளியேறியதை தொடர்ந்து பல்வேறு வன்முறை சம்பவங்களில் அங்கு அடிக்கடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்தார் முகமது தாவுத் கான் எனும் ராணுவ மருத்துவமனையில் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலின் போது பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 25 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து இந்த மருத்துவமனை தாக்குதல் நடத்தியது ஐஎஸ் அமைப்பின் கோராசான் பிரிவை சேர்ந்தவர்கள் தான் என அந்நாட்டின் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அந்த அமைப்பை சேர்ந்த ஐந்து பேர் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.