நடிகை கங்கனா ரனாவத்தின் ட்வீட்டர் பக்கம் முடக்கம்…..!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து, கங்கானா ராணவத் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், அவரது ட்வீட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மே 2-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) 213 இடங்களை வென்றது. 77 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.
இந்நிலையில், நடிகை கங்கனா ரனாவத், தனது ட்வீட்டர் பக்கத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து தொடர்ந்து விமர்சித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (மே 2) அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) வெற்றி பெற்றதையடுத்து, வன்முறையை கட்டவிழ்த்து விட்டபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
மேலும், கங்கனா மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி கோரினார். பாஜக வென்ற அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் இருந்து எந்த வன்முறையும் பதிவாகவில்லை. ஆனால் வங்காளத்தில் டி.எம்.சி வென்ற பிறகு ‘நூற்றுக்கணக்கான கொலைகள் மற்றும் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதாக விமர்சித்துள்ளார். கங்கானாவின் இந்த தொடர் நடவடிக்கையை தொடர்ந்து, அவரது ட்வீட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.