ஸ்மார்ட் ஏபி டீவில்லியர்ஸ்!லயன் பந்தை எறிந்த பின்னும் வாக்குவாதம் செய்யாமல் சென்ற ஏபிடீ…..
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டீவில்லியர்ஸ் ரன் அவுட் ஆனபோது அவர் மார்பு மீது பந்தை எறிந்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயானுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் நடந்தது. இதில் 118 ரன்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் 2-வது இன்னிங்ஸின் போது, ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயான் வீசிய ஓவரில் ஒரு ரன் எடுக்க முற்பட்டு தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டீவ்லிலயர்ஸ் ரன் அவுட் ஆனார்.
டீவில்லியர்ஸ் அடித்த பந்தை வார்னர் பீல்டிங் செய்து லயானிடம் எறிந்தார். அவர் ரன் அவுட் செய்யும்போது, கிரீஸ் கோட்டை தொடும் முயற்சியில் டீவில்லியர்ஸ் கீழே விழுந்தார். இருந்தபோதிலும் லயான் ரன் அவுட் செய்து, அவரை கிண்டல் செய்யும் விதமாக, தான் வைத்திருந்த பந்தை டீவில்லியர்ஸ் மார்பில் வீசி எறிந்துவிட்டுச் சென்றார். மேலும், அங்கிருந்த பேட்ஸ்மன் எய்டன் மார்க்ரமை கிண்டல் செய்துவிட்டுச் சென்றார்.
நாதன் லயான் செயலைப் பார்த்தும் ஆத்திரமடையாத டீவில்லியர்ஸ் அவருடன் எந்தவிதமான வாக்குவாதமும் செய்யாமல் கண்ணியமாக களத்தில் இருந்து வெளியேறினார்.
இதன்பின் முதல் டெஸ்ட் போட்டி முடிந்தபின் இது தொடர்பாக டீவில்லியர்ஸிடம், லயான் மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐசிசி போட்டி நடுவரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புகாரை ஆய்வு செய்த ஐசிசி நடுவர் போட்டியின் ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றத்துக்காக ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயானுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதத்தை அபராதமாக விதித்து உத்தரவிட்டார்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.