ஹைதியில் ஒரே இரவில் 304 பேரின் உயிரை பறித்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!
ஹைதியில் நேற்று இரவு ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால்,கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் சுமார் 304 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று இரவு சக்தி வாய்ந்த 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் சுமார் 304 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 1800 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 2000க்கும் அதிகமான நபர்கள் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால்,ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி அங்கு ஒரு மாத காலத்திற்கு பேரிடர் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார்.நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைகளுக்கு விரைந்து உதவி வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹைட்டியின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் இறந்தவர்களின் எண்ணிக்கை 304 ஆக உள்ளதாகவும்,மேலும்,இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புபடையினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும்,ஹைதியில் உள்ள சிறிய அணைகள், நீர் தேக்கங்கள் உடைந்த காரணத்தால் கிராமங்களுக்குள் நீர் புகுந்துள்ளது.இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து,அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடென் ஹைதியில் உடனடி உதவி முயற்சிகளை தொடங்க ஒப்புதல் அளித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“ஹைதி மக்களுக்கு ஏற்கனவே புயல் எச்சரிக்கை உள்ள ஒரு சவாலான நேரத்தில், பேரழிவு தரும் பூகம்பத்தால் நான் வருத்தப்படுகிறேன்.சேதத்தை மதிப்பிடுவதற்கும் காயமடைந்தவர்களை மீட்பதற்கான முயற்சிகளுக்கு உதவுவதற்கும் தனது நாடு தயாராக உள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர்,கடந்த 2010 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.