பொதுமக்கள் 100 பேர் பலி.! மியான்மரில் ராணுவம் நடத்திய கொடூரமான தாக்குதல்.!
மியான்மர் நாட்டில் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 100 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உலகத்தையே உலுக்கியுள்ளது.
மியான்மர்: சாஜைங் என்ற பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்கும் வகையில், பொதுமக்களை குறிவைத்து மியான்மர் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் பல குழந்தைகள் மற்றும் செய்தியாளர்கள் உட்பட குறைந்தது 100 பேர் கொத்தாக உயிரிழந்துள்ளனர்.
வான்வழி தாக்குதல் நடந்து அரை மணி நேரம் கழித்து, ஒரு ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதற்கு, உலக மக்கள் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சொந்த மக்கள் மீதே தாக்குதல் நடத்திய ராணுவத்திற்கு மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
2021-ல் ஆங் சான் சூகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றியபோது, அதன் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை நடத்தும் பொதுமக்கள் மீது அந்நாட்டு இராணுவம் இது போன்ற வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறதாம். இதனால், 3,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராணுவ படையினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு செய்தி நிறுவனம் மதிப்பிடப்பட்டுள்ளது.