8வது முறையாக சாம்பியன் பட்டத்தை எட்டிப் பிடித்தார் ஃபெடரர்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதன்மூலம் விம்பிள்டனில் அதிகமுறை பட்டம் வென்றவர் என்று வரலாற்று சாதனையைப் படைத்தார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இலண்டனில் நடைபெற்றது, இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ரோஜர் ஃபெடரர் மற்றும் குரோஷியாவின் மரின் சிலிச் மோதினர்.
இதில், 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் மரின் சிலிச்சை தோற்கடித்து வாகைச் சூடினார் ஃபெடரர்.
“ஓபன் எரா”-வில் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற பெருமை 35 வயதான ரோஜர் ஃபெடரர் பெற்றுள்ளார்.
இந்த விம்பிள்டன் தொடரில் ரோஜர் ஃபெடரர் அனைத்து ஆட்டங்களிலும் நேர் செட்களிலேயே வென்றார். இதன்மூலம் கடந்த 41 ஆண்டுகளில் ஒரு செட்டைக்கூட இழக்காமல் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.
சாம்பியன் பட்டம் வென்றதால் ரோஜர் ஃபெடரருக்கு ரூ.18 கோடியும், இறுதிச் சுற்றில் தோற்ற சிலிச்சுக்கு ரூ.9 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.