அரசுப்பள்ளிகளின் அவலநிலை : 826 அரசு பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர்!
தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் 10000க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன .மேலும் இருப்பிடம் ,கழிப்பிடம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத அவலநிலையும் உள்ளது .இது போன்ற அவலநிலைகள் மாற இந்திய மாணவர் சங்கம் (SFI ) தொடர்ந்து தனது எதிர்ப்பு குரலை கொடுத்து வருகிறது .. அதன் விளைவாக தற்போது மத்திய அரசு , 826 அரசு பள்ளிகளில், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதால், அவற்றில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க, உத்தரவிட்டுள்ளது.அரசு தொடக்க பள்ளிகளில், சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. சில மாவட்டங்களில், மாணவர், ஆசிரியர் விகிதம் குறைவாகவும், சில மாவட்டங்களில், அதிகமாகவும் உள்ளது. இந்த பிரச்னையால், தொடக்கப் பள்ளிகளின் கல்வித் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், தமிழக பள்ளிகள் செயல்பாட்டை, மத்திய அரசு ஆய்வு செய்துள்ளது. இதில், பல்வேறு குறைகள் கண்டறியப்பட்டுள்ளன. முக்கியமாக, தமிழகத்தில், 817 தொடக்க பள்ளிகளிலும், ஒன்பது நடுநிலை பள்ளிகளிலும், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுவது தெரிய வந்துள்ளது. இந்த ஒரு ஆசிரியரும், விடுப்பு எடுத்தாலோ அல்லது கல்வித்துறையின் வேறு பணிகளுக்கு சென்றாலோ, பாடம் நடத்த ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு, மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘ஓர் ஆசிரியர் பள்ளியே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் மட்டும், ஓர் ஆசிரியர் பள்ளிகள் இயங்குகின்றன. அங்கு, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மேலும், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை, பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு மாற்றி, கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்’ என, கூறப்பட்டுள்ளது.