ஜனாதிபதியை தேர்வு செய்ய போகும் 71% கோடீஸ்வர எம்பி, எம்எல்ஏக்கள்…….
புதுடில்லி : ஜூலை 17 ம் தேதி நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 4852 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்க உள்ளனர். பெண்கள் குறைவு : நாட்டின் முதல் குடிமகனை தேர்வு செய்ய போகும் இந்த எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் குறித்த ஆய்வு ஒன்றை ஜனநாயக சீர்திருத்த கழகம் நடத்தி உள்ளது. ஆய்விற்கு பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஓட்டளிக்க உள்ள 4852 பேரில் 9 சதவீதம், அதாவது 451 பேர் மட்டுமே பெண்கள். லோக்சபாவில் 65 பெண் எம்.பி.,க்களும், ராஜ்யசபாவில் 23 பெண் எம்.பி.,க்களும். நாடு முழுவதும் 363 பெண் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். உ.பி., மேற்குவங்கம் மற்றும் ம.பி.,யிலேயே அதிக பெண் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். நாகாலாந்தில் ஒரு பெண் எம்.பி.,யோ எம்.எல்.ஏ.,வோ கிடையாது. கோடீஸ்வர கிரிமினல்கள் : ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்க உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்களில் 33 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் 34 சதவீதம் பேர் லோக்சபா எம்.பி.,க்கள், 19 சதவீதம் பேர் ராஜ்யசபா எம்.பி.,க்கள், 33 சதவீதம் பேர் எம்.எல்.ஏ.,க்கள். 20 சதவீதம் எம்.பி.,க்கள் மிக கடுமையான கிரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள். 4852 எம்.பி., எம்.எல்.ஏ.,க்களில் 71 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகவல்கள் அவர்கள் தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் பெறப்பட்டதாகும்.