தண்ணீரில் தத்தளித்த தன் குடும்பத்தை காப்பாற்றிய 7 வயது சிறுவன்..!
நடு ஆற்றில் சிக்கி தவித்த தந்தையையும் தங்கையையும் காப்பாற்றிய 7 வயது மகன்.
அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடாவை சேர்ந்தவர் ஸ்டீபன் போவ்சிட். இவருக்கு செஸ் என்ற மகனும் அபிகெல் என்ற மகளும் உள்ளனர். இவர் வார இறுதிநாட்களில் தனது குடும்பத்துடன் வெளியே செல்வது வழக்கம். அதனால் சில நாட்களுக்கு முன்பு இரண்டு குழந்தைகளையும் ஆற்றில் மீன்பிடிப்பதற்காக அழைத்து சென்றுள்ளார். அமெரிக்காவில் ஆற்றில் மீன்பிடிக்க 6 வயதிற்கு குறைவானவர்கள் கட்டாயம் லைப் ஜாக்கெட் அணிய வேண்டும் என்ற விதிமுறைக்கு ஏற்றவாறு தனது மகளுக்கு லைப் ஜாக்கெட் அணிவித்து அழைத்து சென்றுள்ளார்.
திடீரென்று ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது. இதை சிறிதும் எதிர்பார்க்காத ஸ்டீபன் என்ன செய்வதென்று தெரியாமல் கரைக்கு திரும்ப பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அது தோல்வியில் முடிய மூவரும் நடு ஆற்றில் சிக்கிக்கொண்டனர். வேறு வழியின்றி சத்தமிட்டு உதவிக்கு அழைக்க நினைத்தனர். ஆனால் இவர்களின் குரல் யாருக்கும் எட்டவில்லை. ஸ்டீபனுக்கும் அவரது மகன் செஸ்ஸுக்கும் நீச்சல் தெரியும். அவரது மகள் அபிகெலுக்கு நீச்சல் தெரியாததால் அங்கிருந்து இவர்கள் செல்ல முடியாமல் தவித்தனர். அதனால் செஸ்ஸை கரைக்கு அனுப்பி உதவிக்கு அழைத்து வர முடிவு செய்தார்.
அதன்படி, 7 வயது செஸ் வேகமாக வந்த தண்ணீரையும் சற்றும் பொருட்படுத்தாமல் தனது குடும்பத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் 1 மணி நேரம் நீச்சல் செய்து கரையை அடைந்தான். பிறகு தீயணைப்பு வீரர்களுடன் ஆற்றின் நடுவில் சிக்கிய தனது தந்தை மற்றும் தங்கையை காப்பாற்றினான். தன் குடும்பத்தை காப்பாற்ற 7 வயது சிறுவன் 1 மணி நேரம் அயராது நீச்சல் செய்ததை பலரும் பாராட்டி வருகின்றனர். நன்கு பயிற்சி பெற்ற வீரர்களே இப்படி நீச்சல் செய்ய முடியும் என்பதால் செஸின் வீரம் மற்றும் துணிச்சலை அதிகாரிகள் மற்றும் பலர் பாராட்டி வருகின்றனர்.