காபூல் விமானநிலைய கூட்டத்தில் சிக்கி 7 பேர் பலி..!
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூல் விமான நிலையத்தில் உள்ள கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர், ஒரே வாரத்தில் தாலிபான்கள் முக்கிய நகரங்களை கைப்பற்றினர். தற்போது ஆப்கனில் புதிய அரசை நிறுவ முனைப்போடு செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இதன் காரணத்தால் பலரும் ஆப்கனை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அதனால் விமான நிலையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. குறிப்பாக காபூல் விமான நிலையம் நோக்கி மக்கள் படையெடுப்பதால் அங்கு சமாளிக்க முடியாத கூட்டம் உள்ளது. இதனால் அமெரிக்காவும், அதனுடைய கூட்டு நாடுகளும் விமான நிலையத்தில் குழப்பமான சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர்.
மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கும் பணியை இந்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போதுள்ள கூட்டத்தின் காரணத்தால் மீட்பு பணியின் கால அவகாசத்தை அமெரிக்கா நீட்டித்துள்ளது.
இதனிடையே, தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த கூட்டத்தில் காபூல் விமான நிலையத்தில் உள்ள கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தை எண்ணி வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.