7-வது தங்கப்பதக்கம் வென்றது அசத்தியது இந்திய அணி ..!!
3-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளான நேற்று நடந்த வில்வித்தை போட்டியில் ஆண்களுக்கான தனிநபர் ரிகர்வ் இறுதிசுற்றில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் 6-0 என்ற கணக்கில் ஜாவ் லிஸ்னேவை (சீனா) சாய்த்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இந்த போட்டியில் இந்தியா வென்ற 7-வது தங்கப்பதக்கம் இதுவாகும். ஆண்களுக்கான வட்டு எறிதலில் இந்திய வீரர் மோனு சாங்காஸ் 35.89 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் விஜய்குமார் 5.05 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் பெற்றார். டேபிள் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பவினாபென் பட்டீல்-சோனல் பென் பட்டீல் ஜோடி 4-11, 12-14 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் அசாயுத் டாராரத்-பாட்டார்வதி இணையிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது. செஸ் போட்டியில் பெண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜெனிதா அன்டோ வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் முகமது யாசிரும் (14.66 மீட்டர்), பெண்கள் செஸ் போட்டியில் இந்தியாவின் ஜெனிதா அன்டோ-பிரேமா கனிஷ்ஸ்ரீ ஜோடியும், பெண்கள் செஸ் போட்டியில் மிருனாலி பிரகாஷ், மேக்னா சக்ரபோர்த்தி, திஜன் புனரம் ஆகியோர் அடங்கிய இந்திய அணியும், பளுதூக்குதல் போட்டியில் ஆண்களுக்கான 80 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் சுதிரும் வெண்கலப்பதக்கம் வென்றனர்.
இந்த போட்டியில் இந்தியா இதுவரை 7 தங்கம், 13 வெள்ளி, 17 வெண்கலம் என்று மொத்தம் 37 பதக்கங்களுடன்9-வது இடத்தில் உள்ளது. சீனா 104 தங்கம், 52 வெள்ளி, 39 வெண்கலம் என்று மொத்தம் 195 பதக்கங்கள் வென்று முதலிடத்தில் நீடிக்கிறது.
DINASUVADU