“7 பேர் விடுதலை”பினாமி ஆட்சியின் உருப்படியான முடிவு..பாமக நிறுவனர் ராமதாஸ்..!!
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுனருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை பரிந்துரை செய்திருக்கிறது. தமிழக அமைச்சரவையின் முடிவு வரவேற்கத்தக்கதாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
7 தமிழர்களின் விடுதலை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் தீர்ப்பளித்த நிலையில், அதனடிப்படையில் தமிழக அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்திருக்கிறது. ஒன்றரை ஆண்டு கால பினாமி ஆட்சியில் எடுக்கப்பட்ட உருப்படியான முடிவு இதுவாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161&ஆவது பிரிவின்படி ஆளுனருக்கு இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆளுனர் இந்த பரிந்துரையை எந்த காரணத்தைக் கூறியும் நிராகரிக்க முடியாது. கடந்த 2000-ஆவது ஆண்டில் நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி அப்போதைய திமுக அரசு அளித்த பரிந்துரையை ஆளுனர் பாத்திமா பீவி ஏற்றுக் கொண்டு தண்டனையைக் குறைத்தார் என்பது வரலாறு ஆகும்.
எனவே, தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை சர்ச்சை ஆக்காமல், அதை ஏற்று 7 தமிழர்களையும் விடுதலை செய்ய ஆளுனர் பன்வாரிலால் புரோகித் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
DINASUVADU