6800 கோடி கடன் பெற்று டைமன்ட் நிறுவனம் மோசடி..!
வின்சம் வைர நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விவரங்களை சிபிஐக்கு வழங்க ஐக்கிய அரபு அமீரக வங்கிகளுக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதி இருந்தும் வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களில் விஜய்மல்லையாவின் கிங்பிசர் ஏர்லைன்சுக்கு அடுத்தபடியாக வின்சம் குழுமம் உள்ளது. வின்சம் டையமண்ட்ஸ், வின்சம் ஜுவல்லரி ஆகிய இரு நிறுவனங்களும் 15வங்கிகளுக்கு ஆறாயிரத்து எண்ணூறு கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.
வின்சம் குழுமத் தலைவர் ஜதின் மேத்தா மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான செயின்ட் கிட்சில் உள்ளார். இந்நிலையில் வின்சம் நிறுவனத்தின் கடன் மோசடி பற்றிய வழக்கை விசாரிக்கும் சிபிஐ, அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்குமாறு ஐக்கிய அரபு அமீரக அரசுக்குக் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து வின்சம் வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்க வங்கிகளுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு அனுமதி அளித்துள்ளது.