6,700 வீடுகள் காலி…1,00,000 ஏக்கர் நாசம்… 3,200 மீட்பு படையினர்… 25 பேர் பலி..தீயின் பிடியில் கலிபோர்னியா…!!
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் காட்டுத்தீயினால் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் அதிருப்தி தெரிவித்தார்.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. வன நிர்வாகம் மிக மோசமானதுதான் இதற்கு காரணம் என ஜனாதிபதி டிரம்ப் சாடினார்.அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரே நேரத்தில் 3 இடங்களில் காட்டுத்தீ பிடித்து, வேகமாக பரவி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை நாசமாக்கி வருகிறது.
முதலில் அந்த மாகாணத்தின் வட பகுதியில் சாக்ரமண்டோ நகருக்கு வடக்கில், புளுமாஸ் தேசிய காட்டில் கடந்த 8-ந் தேதி தீப்பிடித்து பரவத்தொடங்கியது. இந்த காட்டுத்தீ அந்த பகுதியில் உள்ள பாரடைஸ் நகரில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த நகரமே இந்த காட்டுத்தீயின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி விட்டது. சாம்பலுக்கு மத்தியில் மக்கள் நடமாடுகிற நிலை அங்கு உருவாகி உள்ளது.
இங்கு காட்டுத்தீக்கு 9 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகி இருந்தது. இப்போது அங்கு காட்டுத்தீக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக பட்டி நகர ஷெரீப் கோரி ஹோனியா நிருபர்களிடம் நேற்று முன்தினம் பேசினார். அப்போது அவர், “ஏற்கனவே 9 பேர் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பாரடைஸ் நகரில் மேலும் 10 பேரின் உடல்கள் கிடைத்துள்ளன. பாரடைஸ் நகருக்கு அருகே உள்ள கன்கவ் பகுதியில் 4 பேரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன” என கூறினார்.இங்கு தீயினால் 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நாசமாகி விட்டது. 20 சதவீத அளவுக்குத்தான் அங்கு தீயைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
6 ஆயிரத்து 700-க்கும் மேலான வீடுகள், வணிக நிறுவனங்கள் எரிந்து சாம்பலாகி விட்டன. கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ வரலாற்றில் இது மிக மோசமான விளைவு என கூறப்படுகிறது.தென் பகுதியில் ஊல்சி காட்டுத்தீ பரவி பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அங்கு தீயின் அளவு இரு மடங்காகி விட்டது. இந்த தீயினால் கடலோர பகுதியான மாலிபு பகுதி மிகவும் பாதித்துள்ளது. 70 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு, தீயின் கொடிய நாக்குக்கு இரையாகி உள்ளது.
மாலிபு பகுதியில் காட்டுத்தீக்கு 2 பேர் பலியாகினர். இதன் மூலம் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து விட்டது. ஹில் காட்டுத்தீ தவுசண்ட் ஓக்ஸ் நகர் அருகே பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.
“3 இடங்களிலும் பரவி வருகிற காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள சேதங்கள், நம்ப முடியாத அளவுக்கு உள்ளது, நெஞ்சை நொறுக்கிற விதத்தில் அமைந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவருக்காகவும் வருந்துகிறோம்” என கலிபோர்னியா மாகாண நெருக்கடி கால சேவைகள் அமைப்பின் இயக்குனர் மார்க் சிலார்டக்கி வேதனைவுடன் கூறினார்.
அந்த மாகாணத்தின் புதிய கவர்னர் கெவின் நியூசாம், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்கு வசதியாக நெருக்கடி நிலையை அமல்படுத்தி உள்ளார்.
உலக நாடுகளையெல்லாம் சோதனைக்கும், வேதனைக்கும் ஆளாக்கிய முதலாம் உலகப்போர் நினைவுதினத்தையொட்டி பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு வனத்துறையினரை கடுமையாக சாடி டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “ வனத்துறையின் நிர்வாகம் மிக மோசமாகி உள்ளது. அது தவிர இந்த மிகப்பெரிய, கொடிய காட்டுத்தீக்கு வேறு எந்த காரணமும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் வனத்துறைக்கு பல நூறு கோடி டாலர்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கெல்லாம் காரணம், வனத்துறையின் தவறான நிர்வாகம்தான். இதற்கு நிவாரணம் கண்டாக வேண்டும். இல்லாவிட்டால், வனத்துறைக்கு மத்திய நிதி இனி கிடையாது” என கூறி உள்ளார்.
இதற்கிடையே 3 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் தொடர்ந்து தீயை கட்டுப் படுத்த போராடி வருகின்றனர்.
dinasuvadu.com