இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் கைது!
திரிகோணமலை சல்லி கடற்பகுதியில் 67 பேரையும் கைது செய்தது இலங்கை கடற்படை.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கை மக்கள் அகதிகளாக பிற நாடுகளில் தஞ்சை அடைந்து வருகின்றனர். அவ்வப்போது, கடல் வழியாக பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் சிலர் கைதும் செய்யப்படுகின்றனர்.
அந்தவகையில், தற்போது, இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் திருகோணமலை கடற்பகுதி வழியாக வெளிநாட்டுக்கு அகதிகளாக தப்ப முயன்ற 3 குழந்தைகள் உள்பட 67 பேரை அந்நாட்டு கடற்படை கைது செய்துள்ளது. கைதானவர்கள் யாழ்பாணம், மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.