ஜப்பான் மீன்பிடி கப்பலுடன் மோதிய 662 டன் எடை கொண்ட ரஷ்ய கப்பல் – 3 பேர் பலி!
9.7 டன் நண்டுகளை ஏற்றி சென்ற ஜப்பான் மீன்பிடி கப்பலுடன் ரஷ்ய கப்பல் மோதியதில், இருவர் காயமடைந்துள்ளதுடன், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவில் 662 டன் எடை கொண்ட ரஷ்ய வணிகக் கப்பலான அமுர் மற்றும் ஜப்பானிய மீன்பிடிக் கப்பலான டைஹாச்சி இரண்டும் மோதிக்கொண்டுள்ளது. இந்த விபத்தில் 9.7 டன் நண்டுகளை ஏற்றி வந்த ஜப்பான் மீன்பிடி கப்பல் கவிழ்ந்து உள்ளது. இதில் அந்த கப்பலில் இருந்த 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இருவர் லேசான காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்து ஹொக்கைடோவில் உள்ள மோன்பெட்சு துறைமுகத்திலிருந்து வடகிழக்கில் 23 கிலோ மீட்டர் தொலைவில் நடந்ததாகவும், காலை 6 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கடும் மூடுபனி இருந்ததாகவும், அதனால் ரஷ்ய கப்பல் சின்ன மீன்பிடி கப்பலை கவனித்திருக்க வாய்ப்பில்லை எனவே இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விபத்து குறித்த முறையான காரணம் என்ன என்பது குறித்து தெரியாத நிலையில் ஜப்பான் கடலோர காவல்படை இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.